Aran Sei

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்பு – தமுஎகச கண்டனம்

ம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிக்கப் பட்டதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர்(பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதுமுள்ள இறைச்சியுணவுப் பிரியர்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும் சேர்த்தே குறிக்கிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2022 மே 13,14,15 தேதிகளில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா” நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான தயாரிப்புக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், “பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெறாது” என்று கண்டனத்திற்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆம்பூரில் அன்றாடம் 10 ஆயிரம் கிலோ அளவுக்கு மாட்டிறைச்சி விற்பனையாகிறது. அந்தளவுக்கு அது அங்குள்ளவர்களில் பெரும்பான்மையினரால் விரும்பியுண்ணப்படுவதாக இருக்கிறது. ஆனாலும் ஆம்பூரில் நடக்கும் “பிரியாணி திருவிழா” என்கிற பொதுநிகழ்வில் அரசே ஒதுக்கிவைப்பதை ஏற்கமுடியாது என்று அக்கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்த துணை ஆட்சியர், “மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தினால் சிலர் பன்றிக்கறி பிரியாணியும் இடம்பெற வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதை ஏற்காத சிலர் பிரச்னை செய்யக்கூடும்” என்று இவராக ஒரு பிரச்னையைக் கிளப்பியிருக்கிறார்.

உலகத்தில் எங்குமே ‘பன்றிக்கறி பிரியாணி’ என்ற வகையே இல்லாதபோது அவராக இப்படி மதக்கண்ணோட்டத்தில் ஒரு பிரச்னையைக் கிளப்பி மாட்டுக்கறி பிரியாணியை நிராகரித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.

ஆவடி அருகே 20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அமையவுள்ள பசுக்கூடம்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு

தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் மாட்டிறைச்சி நெடுங்காலமாகவே இடம்பெற்றிருப்பதை பண்பாட்டு மானுடவியல் சார்ந்த ஆய்வுகள் பலவும் நிறுவியுள்ளன. ஆனால் இந்த வரலாற்றுண்மையை  மறைத்து மாட்டைப் புனிதமாகவும் மாட்டிறைச்சி உண்பதை இழிவாகவும், பொதுவெளியில் புழங்கத்தகாததாகவும் இந்துத்துவவாதிகள் கட்டமைத்துவரும் அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் பணிந்துவிட்டதோ என ஐயுற வேண்டியுள்ளது.

தலித்துகள், இஸ்லாமியர் மட்டுமன்றி சாதி மதம் கடந்து பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விரும்பியுன்கிற – அவர்களின் கொண்டாட்டத்திற்குரிய மாட்டுக்கறியின் மீதான ஒவ்வாமையும் புறக்கணிப்பும் இம்மக்களின் உணவுப்பண்பாட்டை அவமதிப்பாதாகி விடும் என்பதை உணர்ந்து திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மாட்டுக்கறி பிரியாணியும் இடம்பெறும் வகையில் “ஆம்பூர் பிரியாணி திருவிழா” நடத்தப்பட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் தமுஎகச வலியுறுத்துகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 25000 வீடுகள் அகற்றப்பட இருக்கு | RA Puram Govindasamy Nagar Eviction

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்