Aran Sei

வைரசுக்கும், வதந்திக்கும் எதிராக இருமுனைப்போர் நடத்த வேண்டும் – வைஷ்னா ராய்

credits : the hindu

நோயாளிகளின் எண்ணிக்கையும், மரண விகிதமும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இதற்குமேல் மோசமடைய முடியாது என்று ஒருவர் நினைத்துக் கொண்டிருந்தால் அது மிகவும் தவறு. ஏனென்றால் அந்த ஒருவர் தெற்கு பெங்களூரின் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் இருப்பை மறந்து விட்டிருக்கிறார். அசாத்தியமான முட்டாள் தனங்கள் மற்றும் பொய் மூட்டைகளுக்கு நடுவே தாக்குப்பிடித்து நிற்க முடிந்திருக்கிறது என்றால் அது, சூர்யாவின் மட்டமான வெறுப்புணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்துத்துவ வெறியாட்டங்கள் நடப்பதை கண்டும் காணாமல் கடந்த ஆறு ஆண்டுகளாக கல்வி கற்ற நடுத்தர வர்க்கம் இருந்திருக்கிறது. கால்நடை வியாபாரிகள் தாக்கப்படுவது, ரயில் இருக்கைக்காக கொலை செய்யப்படுவது, கோயில் குழாயில் தண்ணீர் குடிப்பதற்காக தாக்கப்பட்ட சிறுவன்- போன்றவை ‘கவ்-பெல்ட்’ அராஜகம், உதிரிகளின் வன்முறை, குருங்குழுக்களின் சாகசம் என்ற வியாக்கியானங்களால் மூடி மறைக்கப்பட்டன. ஆகையால் தான் நாம் தேஜஸ்வி சூர்யாவை கண்டும் காணாமல் இருக்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.

இது ஒரு சாலையோர ரவுடியின், உதிரியின் நடவடிக்கை அல்ல. கல்வி கற்ற, நல்ல சமூக நிலையில் இருக்கிற, ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் பல்கலைக்கழகங்களின் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆதரவை பெற்று, மைய நீரோட்டத்தில் அமர்ந்திருக்கிறார் சூர்யா. இவ்வாறான ஒரு நகரத்தில், இவ்வாறான ஒரு மனிதன், அரசு சுகாதார மையத்திற்கு அடாவடியாக நுழைந்து ஒரு பட்டியலை எடுத்து அதில் உள்ள இஸ்லாமிய பெயர்களை வாசித்து அவர்கள்மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைக்க முடியுமென்றால், மத அடிப்படைவாதம் மைய நீரோட்டத்தில் நகர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

பெங்களூரு, நகரம் என்கிற காரணத்தினால், எழுந்த சலசலப்பு, நிறைவாக சுகாதார மையத்தில், தான் வாசித்த பெயர்களில் மத அடையாளங்கள் தெரியாது என்று வியாக்கியானம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் சூர்யாவுக்கு ஏற்பட்டது. அவமானப்படுத்தப்பட்டு , பணிநீக்கம் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு அதற்குரிய நிவாரணமோ மன்னிப்போ கிடைக்கப்பெறவில்லை. மிரட்டப்பட்ட இந்த இளம் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த விவகாரத்தை மேற்கொண்டு எப்படி எடுத்துச் செல்லலாம் என்ற திசை தெரியாமல் இருக்கலாம், ஆனால் பெங்களூர் குடிமக்கள் அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக  இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295A, 211, 499 கீழ் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். மதரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அடாவடித்தனங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு உறுதியாக தண்டிக்கப்பட்டால் தவிர, இவ்வாறான அடிப்படைவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்குப்பின், தில்லியின் ‘கான் சாச்சா’ உணவு விடுதியிலிருந்து, 96 அக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உடனே உணவகத்தின் பெயரை முன்வைத்து ஒரு சர்ச்சை மேல் எழும்பியது. அதன் காரணமாக அந்த உணவகத்தின் உரிமையாளர் பெயர் நவநீத் கலரா என்று விளக்கம் தரும்படி பலரையும் நிர்ப்பந்தித்தது.

இந்த தெளிவுபடுத்தல்கள், மறுப்புகள் ஆகியவை , பழைய பாணியில் செய்திகளை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் நடைமுறை, தற்போதைய வெகுஜன தொலை தொடர்புகளின் காலத்திலும் நடந்து வருகிறது‌‌. தகவல் தொடர்புகளின் மர்மமான இணையம் என்று நான் கருதும் இணையதளங்களின் வழி வாட்ஸ்அப் ஃபார்வேர்டு, காணொளிகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்தி துணுக்குகள் உள்ளிட்ட தவறான செய்திகளைப் பரப்பும் ஒரு வலைப்பின்னல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.
.
அந்த உலகத்தில் , பெங்களூர் மருத்துவமனை படுக்கைகள் தொடர்பான ஊழலில் முஸ்லிம் ஊழியர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதைப்போல, மர்மமான ‘கான்’, ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி இருப்பார். அந்த உலகத்தில் பெயர்களை வாசிக்கும் சூர்யாவின் காணொளிகள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும், ஆனால் ஒருபோதும் சூர்யாவின் ‘நான் அப்படி சொல்லவில்லை’ என்று விளக்கமளிக்கும் காணொளி வரவே வராது. பல ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போன கான் சாச்சா விடுதியின் முன்னாள் உரிமையாளரின் பெயர் தொடர்ந்து பகிரப்படும், ஆனால், கல்ராவின் (உண்மையான உரிமயாளர்) பெயர் பகிரப்படாது‌.

இந்த நிகர்நிலை உலகத்தின் தரவுகள், ஊர்ஜிதப் படுத்தப்பட்ட வெளிப்படையான உலகத்தின் தரவுகளுக்கு எதிர்மறையாக இருக்கும். அந்த திரிக்கப்பட்ட தரவுகள் போலி அறிவியலின் எழுச்சியை ஊக்குவிப்பதோடு, பெரும்பாலான இந்தியர்கள் பேரிடருக்கு எதிரான தங்கள் கவசங்களை கைவிட வைக்கிறது.

இன்று நாம் எதிர்கொண்டு இருக்கும் சவால்கள் இரண்டு அடுக்குகளைக் கொண்டது: வைரசால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு மருத்துவ உதவியை செய்வதோடு மட்டுமல்லாமல், தவறான தகவல்கள் என்னும் வைரசால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிற மக்களுக்கு, உரிய வழியில் தடுப்பூசி போடுவதை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். முதல் போரை நாம் ஒப்பீட்டளவில் இலகுவாக வென்று விட முடியும். ஏனென்றால், வெறுப்பை பரப்பும் தேஜஸ்வி சூர்யா மற்றும் அவர்களது திரிபுவாத கூட்டத்திற்கு தாங்கள் பொதுவெளியில் அம்பலப்படுத்தபட மாட்டோம், என்ற நம்பிக்கை இருக்கிறது.

பகடிகளின் வழி 700 சொற்களில் எழுத்தாளர் சமூகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்

(www.thehind.com நாளிதழில், வைஷ்னா ராய் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்