Aran Sei

‘டாக்டர்கள் இறைதூதர்கள், கடவுளின் வரப்பிரசாதம்; அவசர சிகிச்சை அலோபதிதான் சிறந்தது’ – பாபா ராம்தேவ்

டாக்டர்கள் அனைவரும் இறைதூதர்கள் என்றும் அவர்கள் மனிதகுலத்திற்கு உதவ கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட ஒரு வரப்பிரசாதம் என்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

அண்மையில், பாபா ராம்தேவ் பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அதில், “அலோபதி மருத்துவம் ஒரு முட்டாள்தனமான அறிவியல். அலோபதி மருந்துகளை உட்கொண்டு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். ரெம்டெசிவிர், ஃபாவிஃப்லு மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் கொரோனாவிற்கு எதிரான சிகிச்சையில் தோல்வியுற்றது.” என்று ராம்தேவ் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று (மே 26) அல்லோபதி மருத்துவம் மற்றும் மருத்துவர்கள்குறித்து ராம்தேவ் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

‘என்னைக் கைது செய்ய யாருக்கும் தைரியம் கிடையாது’ – இந்திய மருத்துவ சங்கத்திற்கு பாபா ராம்தேவ் எச்சரிக்கை

இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாபா ராம்தேவ் வெளியிட்ட காணொளி ஒன்றில், “என்னைக் கைது செய்ய யாருக்கும் தைரியம் கிடையாது, அவர்கள் வெறுமனே கூச்சலிடுகிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியுமோ செய்யட்டும்.” என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூன் 10), செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாபா ராம்தேவ், “ஆயுர்வேதமும் யோகாவும் வாழ்க்கை முறை. மரபணு தொடர்பான நோய்கள், குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தவை. இது பல நூற்றாண்டுகளாக அனைவரும் அறியப்பட்ட உண்மை . அதில் சந்தேகமில்லை.” என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

‘தவறான தகவல்களைக் கூறி மக்களைக் குழப்புகிறார் பாபா ராம்தேவ்’ – இந்திய மருத்துவ சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார்

“டாக்டர்கள் அனைவரும் இறைதூதர்கள். அவர்கள் மனிதகுலத்திற்கு உதவ கடவுளால் இந்தப் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம். நான் எந்த குழுவுடனும் எதிரியாக இருக்க விரும்பவில்லை. ஒருசில மருத்துவர்கள் தவறும் செய்கின்றனர் என்பதற்காக, மொத்தமாக அந்த மருத்துவமுறையையே தவறு என சொல்லக்கூடாது. அது தனிநபரின் தவறு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவசர சிகிச்சைக்கும் அறுவை சிகிச்சைக்கும் அலோபதி மருத்துவம்தான் சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை என்று பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

source; newindianexpress

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்