Aran Sei

கொராவுக்கு எதிரான நடவடிக்கை – தடுப்பூசியை அனுமதித்தது பஹ்ரைன்

Image Credits: The Economic Times

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கான தடுப்பூ மருந்தைத் தயாரித்துள்ளது. சமீபத்தில், இதைப் பரவலாகப் பயன்படுத்தப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, தற்போது மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனும் இம்மருந்தை அவசரகால அடிப்படையில் பரவலாகப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இந்தத் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கிய உலகின் இரண்டாவது நாடாக பஹ்ரைன் திகழ்கிறது.

பஹ்ரைன் தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியபின் , அந்நாட்டின் செய்தி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முழுமையான பகுப்பாய்வுக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.

வாங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தடுப்பூசிகளின் விநியோகம் எப்போது தொடங்கும் போன்ற தகவல்களைப் பஹ்ரைன் இது வரை வழங்கவில்லை. இது தொடர்பாக, அசோசியேட்டட் பிரஸ் எழுப்பிய கேள்விகளுக்குப் பஹ்ரைன் எதுவும் பதிலளிக்கவில்லை.

அசோசியேட்டட் பிரஸ்ஸின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஃபைசர், பஹ்ரைனுடனான அதன் விற்பனை ஒப்பந்தத்தின் விவரங்கள், விநியோக நேரம் மற்றும் அளவு குறித்த தகவல்கள் ரகசியமானவை என்று கூறியுள்ளது.

“தடுப்பூசிகளை அனுப்பிவைப்பதற்கான அணைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் வெப்பநிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றும் ஃபைசர் கூறியுள்ளது. “தடுப்பூசிகள் உறைந்த நிலையில் போடப்படும் இடத்திற்கு அனுப்பப்படும்” என்றும் அது தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்துகள் மூன்று வார இடைவெளியில் இரண்டு முறை கொடுக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் .16 லட்சம் மக்கள்தொகை கொண்ட பஹ்ரைனில் 87,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால், 341 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தகவல் வெளியானது. கொரோனா பாதிப்பிலிருந்து  85,000 க்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடபட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்