பிப்ரவரி 3 அன்று மீரட்டில் இருந்து தேர்தல் நிகழ்ச்சியை முடித்தது விட்டு டெல்லிக்குப் புறப்பட்ட தனது கார் மீது சஜர்சி சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஒவைசி தெரிவித்திருந்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சச்சின் பண்டிட் மற்றும் ஷுபம் ஆகிய 2 பேரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் சச்சின் பண்டிட் என்பவர் பாஜக உறுப்பினர் என்பதை அவரது ‘தேஷ்பக்த் சச்சின் இந்து’ என்ற பேஸ்புக் கணக்குக் காட்டிக்கொடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்களுடன் அவர் நெருக்கமாக எடுத்துள்ள பல்வேறு புகைப்படங்கள் பேஸ்புக் இல் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் குற்றவியல் சட்டத் திருத்தத்தின் பிரிவு 7 (வேலை மற்றும் தொழில் போட்டி காரணமாக ஒரு நபரைத் துன்புறுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
சச்சின் பண்டிட் இன் பேஸ்புக் பக்கத்தில் அசாதுதீன் ஒவைசியைக் கொல்ல விரும்புவது முதல் ஒவைசியை மனித வெடிகுண்டாக மாற்றி பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைப்பது வரை பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன.
2020 ஜனவரி 30, அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய ஜாமியா மிலியா மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பதிவுகளை இவர் பகிர்ந்துள்ளார்.
2019 ஜூலை 7 அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் பாஜக உறுப்பினர் அட்டையை சச்சின் பண்டிட் வெளியிட்டுள்ளார். பாஜகவின் முன்னாள் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சரும், கௌதம் புத்தா நகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மகேஷ் ஷர்மாவின் தேர்தல் பிரச்சார பயணத்தின்போது அவருடன் சச்சின் பண்டிட் எடுத்து கொண்ட புகைப்படம் உட்பட பல்வேறு புகைப்படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சரான அமித்ஷா அருகில் சென்று எடுத்துள்ள செல்பி புகைப்படம் ஒன்றும் அவருடைய பேஸ்புக் பக்கத்தில் உள்ளது.
காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?
உத்திரபிரதேச துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா, உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய், பாஜகவின் தேசிய இணைப் பொதுச் செயலாளர் சிவபிரகாஷ் உட்பட பல்வேறு முக்கிய பாஜக தலைவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் பேஸ்புக் பக்கத்தில் உள்ளது.
2021 டிசம்பர் 26, அன்று உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்து ரக்ஷா தள வேட்பாளர் அமித் ரஜாபதிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த பிங்கி சௌத்ரி, ஒவைசியைக் கொல்லுமாறு தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார். பிங்கி சௌத்ரி என்பவர் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்யவேண்டும் என்று பேசிய யதி நரசிங்கானந்தின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோடி ஆட்சியில் மக்களை ஒடுக்க பயன்படுத்தப்படும் தேசத் துரோக சட்டம் – அபிஷேக் ஹரி
சச்சின் பண்டிட் தனது பேஸ்புக் பக்கத்தில் யதி நரசிங்கானந்தின் காணொளிகளையும் பகிர்ந்துள்ளார். அதில் இந்துக்கள் தங்கள் சாதி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பொது எதிரியான இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றுபடுங்கள் என்று யதி நரசிங்கானந் அறிவுறுத்துகிறார்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சச்சின் மற்றும் ஷுபம் ஆகியோரை பாராட்டி, அவர்களுக்குச் சட்ட உதவிகளை இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா வழங்கியுள்ளார்.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.