கடலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மூன்று விவசாயத் திருத்தச் சட்டங்களைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் புதுதில்லியில் திரண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பொதுமக்களும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பி வருகிறன.
இந்நிலையில்,விவசாயப் போராட்டதிற்கு ஆதரவாகத் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது என்றும் இவ்வியக்கங்களை முடக்குவதற்குக் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைப்பது, முன்னணி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று கூட பாராமல் தடியடி நடத்துவது, தாக்குவது, பொய்வழக்கு புனைவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
” டிசம்பர் ஒன்றாம் தேதி , விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் கடலூர் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வழியிலேயே தடுத்துக் கீழே தள்ளியுள்ளனர். காவலர்களின் முரட்டுத்தனத்தால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் “ என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 12 பேர் மீது பொய் வழக்கு புனைந்ததுடன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ. மாதவன், நகர செயலாளர் உள்ளிட்டோரைக் கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர் என்றும் காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத, கண்மூடித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
“அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களைத் தாக்குதல் நடத்தி, படுகாயம் ஏற்படுத்தி பின்னர் பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை, உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டுமெனவும், காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்திய கடலூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.