Aran Sei

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் சேதம் – வழக்குப் பதிந்த காவல்துறை

பாகிஸ்தானின் காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில், அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதாக காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

நேற்று முன்தினம் (மார்ச் 29), இரவு 7.30 மணியளவில், 10, 15 பேர் அக்கோயிலின் பிரதான கதவு, மேல்தளத்தில் உள்ள மற்றொரு கதவு மற்றும் படிக்கட்டுகளைச் சேதப்படுத்தியுள்ளதாக காவல்துறை பதிந்துள்ள வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 கோடி மதிப்பீட்டில் இந்து கோயில் : இஸ்லாமாபாத்தில் கட்ட அனுமதித்த பாகிஸ்தான் அரசு

வடக்கு மண்டலத்தின் எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியத்தின் (இடிபிபி) பாதுகாப்பு அதிகாரியான சையத் ராசா அப்பாஸ் ஜைடி, ராவல்பிண்டியில் உள்ள பன்னி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “கடந்த ஒரு மாதமாக புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. மார்ச் 24 அன்று கோயிலுக்கு முன்னால் இருந்த சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோயிலில் இன்னும் வழிபாட்டு சடங்குகள் தொடங்கப்படவில்லை. சிலையோ வேறு வழிபாட்டு பொருட்களோ இல்லை.” என்று கூறியுள்ளதாக டான் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அச்செய்தியில், “கோயிலுக்குச் சேதம் ஏற்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயன்றேன். முன்னதாக, நீண்ட காலமாக கோயிலின் சுற்றுப்புறங்களில் கடைகளைக் கட்டி ஆக்கிரமித்திருந்தனர்.” என்று அவர் அப்புகாரில் தெரிவித்துள்ளார்.

கோயில் சொத்துகள் யாருக்கு? – இந்து அறநிலையத் துறையின் வரலாறு

காவல்துறையினரின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் அக்கோயிலில் செய்யப்பட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றியதை தொடர்ந்து, கோயிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக இந்து சமூகம் உள்ளது. தோராயமாக, பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தானில் புதிதல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கரக் மாவட்டத்தில் ஒரு கும்பலால் இந்து கோவில் தாக்கப்பட்டு சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்