Aran Sei

ஓராண்டு திமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குறியீட்டு அரசியல்

Credits MK Stalin twitter

முதலமைச்சர் ஸ்டாலினின் குறியீட்டு அரசியல் (Politics of Symbolism)

என்ன செய்கின்றன முதல்வர் அமைத்த குழுக்கள்?

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே குறியீட்டு நடவடிக்கைகளில் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார். அதாவது, தமிழ்நாடு பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, மழை நீரால் சென்னை பாதிக்கப்படாத வண்ணம் வடிகால் அமைக்க குழு, தமிழ்நாட்டில், கல்வி, வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள், நியமனங்களில் சமூக நீதி முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு,  நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த குழு, மின்சார வாரியத்தில் பணி நியமனம் பெறாத 5,493 கேங்மேன் பிரச்னைகளை தீர்க்க குழு என முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை மிக நீண்டது.

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் பல சந்தர்ப்பங்களில் பல பிரச்னைகள் முதன்மையாக எழுந்தன. அதனை ஒட்டியே இந்த குழுக்களின் அவசியமும், அதன் நிர்வாகமும் கட்டமைக்கப்பட்டதை புரிந்து கொள்ளலாம்.

 

உள்ளடக்கத்தில் கவனம் இல்லையா?

முதலமைச்சர் ஸ்டாலினால் அமைக்கப்பட்ட குழுக்களின் தற்போதைய நிலை என்ன என்பதை ஆராய வேண்டியுள்ளது. அதே சமயத்தில், இந்த குழுக்கள் தற்போது வரை என்ன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு பெற்ற ஆக்கப்பூர்வ நகர்வுகள் என்ன? இது, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கடந்த பத்து மாதமாக என்ன பங்களிப்பை செய்துள்ளன என்றால் அதற்கான முழுமையான விடை இதுவரை கிடைத்தபாடில்லை. மாறாக, தனது ஆட்சியின் மீதான நல்ல அபிப்ராயத்தை இந்த குழுக்களை அமைப்பதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்க முடியும் என நம்புகிறாரோ என்ற எண்ணமே தோன்றுகிறது. அதாவது, தனது ஆட்சியின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முடியும் என அவர் நம்பக்கூடும். ஒட்டு மொத்தத்தில், இது போன்ற குழுக்கள் அமைப்பதில் ஸ்டாலின் ஆர்வம் காட்டுவது, தனது ஆட்சியில் குறியீட்டு அரசியல் மீது அதீத கவனம் செலுத்துவதும் உள்ளடக்க விஷயத்தில் கவனம் செலுத்த தயங்குகிறார்.

உதாரணமாக ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். கெய்ல் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு 5 லட்சம் ரூபாய் நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி பிரச்னையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், விவசாயி தான் தற்கொலை செய்வதற்கு முன்பாக கேட்ட கோரிக்கையான கெய்ல் குழாய் பதிப்புக்கு எதிரான விஷயத்தைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

 

திடீர் ஆய்வுகளும் நம்பகத்தன்மையும்

கண்ணகி நகரில் திடீரென பேருந்தில் ஏறி ஆய்வு (23.10.2021). தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்திலும், (29.09.2021) அம்பத்தூர் காவல் நிலையத்திலும் (15.04.2022) திடீர் ஆய்வு. தேனாம்பேட்டை மண்டலத்தில், மழையால் சேதமடைந்த வாரன் சாலை மற்றும் மகாலிங்கம் சாலைகளில் இரவில் திடீர் ஆய்வு (14.01.2022),  விழுப்புரம் முதலியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக (27.10.2021) பள்ளிகளில் திடீர் ஆய்வு,  முதலமைச்சரின் தனிப்பிரிவில் (05.10.2021)ல் திடீர் ஆய்வு செய்தார்.

இந்த திடீர் ஆய்வுகள் மூலமாக ஏற்பட்ட பலன் என்ன என்பதை தற்போது திரும்பிப் பார்த்தால் கேள்வி தான் மிஞ்சுகிறது. திடீர் ஆய்வுகள், திடீர் சோதனைகள் மூலமாக தவறு செய்கிறவர்களை தடுக்க முடியும் அல்லது இந்த ஆட்சியில் தவறுகள் நடக்கிறது என்ற மக்களின் கருத்துக்களை மாற்ற முடியும் என ஸ்டாலின் நம்புகிறார். திரும்பத் திரும்ப உள்ளீட்டு விஷயத்தில் ஸ்டாலின் கவனம் செலுத்துகிறாரா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை. ஒரு சில விஷயங்கள் தவித்து மற்றபடி முழுக்க முழுக்க இதுபோன்ற குறியீட்டு அரசியல் இருப்பதால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் அதிருப்தியில் இருந்து ஒதுங்கி இருக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது.

குறிப்பாக, இலவச பேருந்து விவகாரத்தை எடுத்துக்கொள்ளலாம். பெண்களுக்கு இலவச பேருந்து என்று அறிவிப்பு வெளியிட்டார். கண்ணகி நகர் பேருந்திலும் திடீர் ஆய்வு செய்தார். கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறதா? அல்லது வெள்ளை பலகை கொண்ட பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்பாமல் உள்ளார்கள். அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே உள்ள சாதாரண உரிமைகள் கூட தள்ளிப்போட்டுவிட்டார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14-வது மாநாடு கடந்த டிசம்பர் 2021ல் நடந்தது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்,  பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்த்தார்கள்.

குறிப்பாக, பொங்கல் போனஸ் 7,000 வழங்கப்படும், குரூப் A, Bக்கு மீண்டும் கருணை தொகை, 1.7.2021 முதல் ரொக்கமாக 14 விழுக்காடு அகவிலைப்படி, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் மற்றும் ஓய்வூதியம், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தலில் திமுக செய்வதாக அறிவித்த எந்த ஒரு அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை செய்யவில்லை.  மற்றொரு புறத்தில், அரசு ஊழியர்கள் மீது அக்கறை இருப்பதைப் போல் காட்டிக்கொள்கிறார்.

 

குறியீட்டு அரசியல் நடவடிக்கை

இப்படி நாம் விரிவாக மேலே பார்த்த குறியீட்டு அரசியல் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் மீதான நம்பகத்தன்மையையும், மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் மேலும் அதிகரித்துக்கொள்ளவே முயலுகிறார். அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இந்த குறியீட்டு அரசியல் நடவடிக்கை மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்ட முயலும் தோற்றம் பலன் தராது. அதாவது, மக்கள் மீது அக்கறை இருப்பதாக, மக்களுக்காக ஆட்சி செய்வதாக தோற்றம் காண்பிக்க குறியீட்டு அரசியலை ஸ்டாலின் கட்டமைக்கிறார்.

கஞ்சா – குட்கா விற்பவர்களின் சொத்துக்களை முடக்குவதாக அறிவிக்கிறார். என்கவுண்டர் மூலம் ரவுடித்தனத்தை ஒழிக்க முடியும் என நம்புகிறார்.  அதாவது, குறியீட்டு அரசியல் நடவடிக்கை மூலம் அரசியல் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த கட்டமாக அதிரடி நடவடிக்கைகள் மூலம், திடீர் சோதனைகள் மூலம், திடீர் ஆய்வுகள் மூலம் குறியீட்டு அரசியலில் மட்டும் கவனம் செலுத்துகிறார். உண்மையில் இதுபோன்ற குறியீட்டு அரசியல் இல்லாமல் இருந்திருந்தால் கெய்லுக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இருந்திருக்காது.  மாறாக 5 லட்சம் கொடுத்து பிரச்னையை சமாளிக்கிறார்.

 

தேர்தல் வாக்குறுதியும் குறியீட்டு அரசியலும்

சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையப் போகிறது. ஆனால், சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அவர் இதுவரை எந்த பதிலையும் அளிக்கவே இல்லை. குறைந்த பட்ச வாக்குறுதிகளைக் கூட ஸ்டாலின் இதுவரை பேசாதது இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எல்லா பிரச்சாரக் கூட்டங்களிலும் ஸ்டாலினும் திமுகவினரும் கூறினர். சிறுபான்மையினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக திமுக தங்களைக் காட்டிக்கொள்கிறது. அதன் அடிப்படையில் கூட இஸ்லாமிய சிறை கைதிகள் விடுதலை விவகாரத்தில் எந்த நகர்வையும் ஸ்டாலின் முன்வைக்காதது எதிர்மறை விமர்சனமாக உள்ளது.

அதே போல, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து எல்லாவற்றிற்கும் குழு அமைத்துவிட்டதாக தோற்றத்தைக் காட்டுகிறார். குழுவின் வல்லுநர்களும் சரி, குழுவின் ஆய்வு எல்லைகள், வரையறைகள் எல்லாமே குறியீடாகவே உள்ளன. ஆனால், அவர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்கிறார். கேட்டால், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இருப்பதாக கூறுகிறார். அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு இதயத்தில் இடம் இருக்கிறது என்ற குறியீட்டை காட்டி தப்பித்துக்கொள்கிறார்.

குறியீட்டு அரசியலில் மட்டுமே அதீதமாக ஆர்வம் காட்டிக்கொண்டு, இப்படி ஒரு ஆண்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்கிறார். உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் சொத்துவரியை உயர்த்துகிறார். சென்னையில் குடிசை வாழ் மக்களை அப்புறப்படுத்திக்கொண்டே இன்னொருபுறத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையம் என்ற மாயா ஜாலத்தை செய்கிறார். பாஜகவுக்கு எதிராக பேசுவதாக காட்டிக்கொண்டு சாதாரண பாஜக தொண்டனை கைது செய்கிறது இந்த அரசு. ஆனால், மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஹெச். ராஜா, அண்ணாமலை மீது இதுவரை ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒருபக்கம் சாதியை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவிக்கிறார். பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து உறுதி மொழி ஏற்க வைக்கிறார். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதிய ஆணவக்கொலைக்கு தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை விடை இல்லை.

கோகுல் ராஜ் கொலை வழக்கில் வழக்கறிஞராக இருந்த ப.பா. மோகனுக்கு இதுவரை உரிய சம்பளம் சென்று சேரவில்லை. அதை கொடுக்க கூட இந்த அரசு இதுவரை ஆர்வம் காட்டவில்லை. ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் நெருங்கப்போகிறது கோகுல் ராஜ் கொலை வழக்கில் எதிர்தரப்பினர் மேல்முறையீட்டிற்கே சென்றுவிட்டார்கள். ஆனால், இன்னும் ப.பா. மோகனுக்கான நீதியே இதுவரை கிடைக்கவில்லை.

தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதீத நம்பிக்கை வைத்து தான் ஆட்சியை அவர் கையில் கொடுத்துள்ளார்கள். எனவே, இதனை கருத்தில்கொண்டு, குறியீட்டு அரசியலைத் தவிர்த்துவிட்டு, மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

 

கட்டுரையாளர் – மூத்த பத்திரிகையாளர் ரீங்கன் சூசை முகமது

என் பால்யமும் தாராவியும் | Citizen of Dharavi Ft Maghizhnan | Mumbai | Aransei Podcast |

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்