Aran Sei

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கு வகித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரைஜோர் தளத் தலைவரும் விவசாயிகள் உரிமை ஆர்வலருமான அகில் கோகோய், அசாமை காப்பாற்ற வரவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் வலுவாகவுள்ள பாஜக அல்லாத வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு அம்மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அசாம் மாநிலம் சிப்சாகர் தொகுதியில் போட்டியிடும் கோகோய் சிறையில் இருந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நேற்று (மார்ச் 20), அக்கடிதத்தை, அவரது கட்சியின் ஆலோசகர் டாக்டர் சீதநாத் கஹ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வாசித்துக் காட்டியுள்ளார்.

“அசாமையும் அம்மாநில மக்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக விரோத கட்சியான பாஜகவிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு, நான் இந்தக் கடிதத்தை சிறையிலிருந்து எழுதி அனுப்புகிறேன்” என்று கோகோய் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

அசாம் என்.ஆர்.சி தடுப்பு முகாம்களில் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்

அசாம் மற்றும் அதன் மக்களின் எதிர்காலமானது பாஜக ஆட்சியின் கீழ் இருளடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் (சிஏஏ) பாஜகவையும் எதிர்க்கும் அனைவரும் இந்த அசாம் சட்டபேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒற்றுமையாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

“அசாமின் எதிர்காலம் மக்களின் கைகளில் உள்ளது. அவர்களே அம்மாநிலத்தை காப்பாற்றுவதற்கான இறுதி முடிவை எடுக்க வேண்டும். அசாம் காப்பாற்றப்பட வேண்டுமானால், பாஜகவுக்கோ சிஏஏவுக்கோ ஆதரவானவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.” என்று அகில் கோகோய் கோரியுள்ளார்.

மேலும், “அசாமின் வளங்களை விற்று, மாநிலத்தின் எதிர்காலத்தை டெல்லியின் காலடியில் பாஜக தள்ளியுள்ளது. ஆகவே, நாம் தேர்தலில் பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். இது காலத்தின் தேவை. செய்ய வேண்டிய நம் கடமை. இது வாழ்வா சாவா போராட்டம்.” என்று கோகோய் தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி அசாம் மக்களிடம் பேச பாஜகவிற்கு தைரியம் இல்லை’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

“2016 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி கட்டிலில் ஏறியதிலிருந்து, இந்த ஐந்தாண்டு பதவி காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் என்னை சிறை வைத்துள்ளனர். இங்கு (சிறையில்) நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு துற்பிரளத்திற்குள் தள்ளப்பட்டு, அதனுடனேயே என் சிறை நாட்களை வென்றுக்கொண்டிருக்கிறேன். எனது எதிர்காலம் என்னவாக இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் பாஜக ஆட்சியின் கீழ் அசாமும் அதன் மக்களின் எதிர்காலமும் இருள் சூழ்ந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.” என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கு வகித்ததற்காக, அகில் கோகோய் மீது, 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கைத் தவிர, தேசிய புலானாய்வு அமைப்பு தாக்கல் செய்த வழக்கு உட்பட மற்ற அனைத்து வழக்குகளிலும் அகில் பிணை பெற்றுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பிணை மறுக்கப்பட்ட அந்த ஒரு வழக்கானது, முதலில் கௌஹாத்தியில் உள்ள சந்த்மாரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA), அவர் மீது தேசத்துரோகம், குற்றச் சதி, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, அசாம் மாநிலத்தின் உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்