பெண் காவலரை தாக்கியதாக ஒரு வழக்கை தயாரித்து, அதில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை சிக்க வைக்க அசாம் மாநில காவல்துறை முயன்றுள்ளதாக அம்மாநிலத்தில் உள்ள பார்பேட்டா நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த வழக்கில், ஏற்கனவே பிணை வழங்கப்பட்ட நிலையில், கைது செய்ய வந்த பெண் காவலரைத் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டு ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 29), ஜிக்னேஷ் மேவானிவுக்கு அசாமின் பார்பேட்டா அமர்வு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அந்த பிணை உத்தரவில், “அசாம் மாநிலத்தில் அண்மையில் நடந்த காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிரான மனுவைத் தானாக எடுத்துக்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் காவலில் எடுக்கப்படும்போது, அங்கே நடக்கும் சம்பவங்களை முழுமையாக பதிவு செய்யும் வகையில், அசாம் காவல்துறைக்கு உடல் கேமராக்களை அணியவும், அவர்களின் வாகனங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கவுகாத்தி உயர் நீதிமன்றத்திடம் பார்பெட்டா அமர்வு நீதிமன்றம் கோரியுள்ளது.
பெண் காவலர் தாக்கப்பட்ட வழக்கு – குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை வழங்கிய அசாம் நீதிமன்றம்
“கஷ்டப்பட்டு நாம் பெற்ற ஜனநாயகத்தை கைவிட்டுவிட்டு, அசாமை காவல்துறையின் அரசாக மாற்றுவது நினைத்துப் பார்க்க முடியாதது” என்று நீதிபதி அபரேஷ் சக்ரவர்த்தி உத்தரவில் கூறியுள்ளார்.
“இந்த ‘உடனடி வழக்கு’ உண்மை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின், மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்ட பெண் காவலரின் வாக்குமூலத்தின் வழியாக குற்றச்சாட்டு உண்மை இல்லை என தெரிய வருகிறது என்றால், நம் நாட்டின் குற்றவியல் நீதி மீண்டும் எழுத வேண்டும்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“பதிவு செய்யப்பட்ட எப்ஐஆருக்கு மாறாக, மாஜிஸ்திரேட் முன் அந்த பெண் காவலர் வேறு கதையை கூறியுள்ளார். அப்பெண்ணின் சாட்சியத்தின் அடிப்படையில் பார்த்தால், குற்றம் சாட்டப்பட்ட ஜிக்னேஷ் மேவானியை நீண்ட காலத்திற்கு காவலில் வைக்கும் நோக்கத்திற்காகவே இந்த ‘உடனடி வழக்கு’ தயாரிக்கப்பட்டிருக்கிறது” என்று நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
அசாம்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்யக் கோரி காங்கிரஸ் போராட்டம்
“இது போன்ற தவறான வழக்குகள் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யும் போது ஒவ்வொரு காவல்துறையினரும் உடலில் கேமராக்களை அணிதல், வாகனங்களில் சிசிடிவி பொருத்துதல் போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அசாம் காவல்துறையை சீர்திருத்தம் செய்ய மாண்புமிகு கவுகாத்தி உயர் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். இல்லை என்றால், அசாம் மாநிலம் காவல்துறை மாநிலமாக மாறிவிடும்” என்று பார்பேட்டா அமர்வு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
Source: NDTV
கொலை – மிரட்டல் – பேரம் – Thiruvannamalai Custodial Case
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.