அசாம் மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமையினால் கைதுசெய்யப்பட்டு, தற்போது இரண்டு நாள் பிணையில் வெளிவந்துள்ள சமூக செயல்பாட்டாளர் அகில் கோகோய், அம்மாநில முதலமைச்சர் தன்னை சிறையில் அடைத்துவைக்க அழுத்தம் கொடுத்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2019, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானார் என்று தேசிய புலனாய்வு முகமை அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தது.
மேலும், தற்போது நடந்து முடிந்த அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிப்சாகர் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஜூன் 25 அன்று தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள அகில் கோகோய், “உத்தரபிரதேச மாநிலத்தைப் போன்ற அரசியலை அசாம் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டாம், பாரம்பரிய ரீதியிலான ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அசாம் மாநிலத்தின் ஜனநாயக கூறுகள், சமூக ரீதியாகப் பிளவுபடுத்தக்கூடியதாகவும், பாசிசமாகவும் மாறிவிடக் கூடாது” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
மேலும், அம்மாநில முதலமைச்சர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை விடுவிக்க வேண்டுமென அகில் கோகோய் கோரியுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.