Aran Sei

டெல்லி கலவர வழக்கில் காவல்துறையை கேள்வி எழுப்பிய நீதிபதி – பணியிட மாற்றம் செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி கலவர வழக்கு தொடர்பான டெல்லி காவல்துறையின் தொடர் விசாரணைகளை கேள்வி எழுப்பி வந்த கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவை வேறு நீதிமன்றத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 பெருநகர் நீதிபதிகள் மற்றும் 4 கூடுதல் அமர்வு நீதிபதிகள் உள்ளிட்ட 11 பேரைப் பணியிட மாற்றம் செய்துள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதில் கர்கரடுமா நீதிமன்றத்தில், டெல்லி கலவர வழக்குகளை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ், ரவுஸ் அவன்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக (பிசி சட்டம்) (சிபிஐ) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்தில் அவருக்குப் பதிலாக நீதிபதி வீரேந்தர் பட் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவர வழக்கை விசாரித்து வந்த நீதிபதி வினோத் யாதவ், வழக்கு விசாரணையில் காவல்துறையின் மெத்தனம் மற்றும் அலட்சியபோக்கை விமர்சித்திருந்தார்.

  1. அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்ட தினத்தன்று நடைபெற்ற விசாரணையில், காவல்துறையின் சாட்சியிங்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பது தொடர்பாக அறிக்கை சமர்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.
  2. செப்டம்பர் மாதம் இறுதியில் நடைபெற்ற விசாரணையின்போது, கலவர வழக்கில் கடைகளுக்குத் தீ வைத்ததாக 10 பேர்மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தார். இரண்டு வேறு தினங்களில் நடைபெற்ற சம்பவங்களை ஒன்றிணைத்து குற்றப்பத்திரிக்கை பதியப்பட்டிருப்பதாக நீதிபதி வினோத் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார்.
  3. செப்டம்பர் மாத தொடக்கத்தில், குல்பம் என்பவர்மீது பதியப்பட்ட வழக்கை விசாரித்தபோது, ஒரு முதல் தகவல் அறிக்கையின் கீழ் பெற்றப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றோரு முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதியப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
  4. சசாந்திர சீமா பால் பகுதியைச் சேர்ந்த 65வது பட்டாலியனை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேர்மீதான வழக்கை விசாரத்தபோது, ”காவல்துறையின் விசாரணை மிகவும் மோசமாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
  5. கலவரத்தின்போது துப்பாக்கியால் சுடப்பட்டு பார்வையிழந்த முகமது நாசரின் புகார்மீது வழக்கு பதிய உத்தரவிட்ட வினோத் யாதவ். பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது, கடமையை சரியாக செயல்படுத்தாதது ஆகிய குற்றச்சாட்டுகளின் பெயரில் டெல்லி பஜன்புரா காவல்நிலையத்திற்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
  6. ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு விசாரணையில் காவல்துறை உயரதிகாரிகளின் மேற்பார்வை இல்லை என்பதை சுட்டிக்காட்டிய வினோத் யாதவ், குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் ஒன்றிணைக்கப்பட்டு குற்றச்சாட்டுகள் பதியப்படுதாக குறிப்பிட்டார்.
  7. ஏப்ரல் மாதம் நடைபெற்ற மற்றொரு விசாரணையின்போது, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித் மற்றும் செயல்பாட்டளர் காலித் சைஃபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது கைவிலங்கிட அனுமதி கோரிய டெல்லி காவல்துரையின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
  8. ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, 19 வயது சிறுவனுக்கு பிணை வழங்கிய வினோத் யாதவ். குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகார் அல்லது சாட்சியங்களில் குறிப்பிடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
  9. ஏப்ரல் 7 ஆம் தேதி, கலவரத்தின்போது மதினா மசூதி தீ வைக்கப்பட்டது தொடர்பான விசாரணையைக் காவல்துறை முறையாக மேற்கொள்ளாமல், மெத்தனம் காட்டியது என விமர்சித்தார்.
  10. மார்ச் 26 மதினா மசூதி எரிக்கப்பட்டது தொடர்பான புகாரில் காவல்துறையினர் ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
  11. மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒருவரை கொடுரமான முறையில் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஆஷிஷ் குமார் என்பவரின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.
  12. இரு வேறு கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இஸ்லாமிய இளைஞருக்கு பிணை வழங்கிய வினோத் யாதவ், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த குழுவில் ஒரு இஸ்லாமிய இளைஞர் உறுப்பினராக இருந்தார் என்று காவல்துறை கூறுவது ஏற்கும்படியாக இல்லை என தெரிவித்தார்.

Source : The Wire

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்