Aran Sei

‘மராத்தா இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை’ – மகாரஷ்ட்ர அமைச்சர்

ராத்தா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து மாநிலங்களவையில் எந்த பாஜக உறுப்பினரும் பேசாதது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  மகாராஷ்ட்ர அமைச்சரும், மராத்தா இடஒதுக்கீடு குறித்த மாநில அமைச்சரவை துணைக்குழுவின் தலைவருமான அசோக் சவான் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ர தேர்தல் அரசியலில் மராத்தா சமுதாயம் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் சமூகம்.  மாநிலத்தில் அச்சமுதாயத்தின் மக்கள் தொகையில் 35 விழுக்காடாக உள்ளது.

கடந்த மே 5 அன்று, மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மே 11 அன்று, மகாராஷ்ட்ரா மாநில அரசு இந்தத் தீர்ப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திலீப் போசல் தலைமையில் குழுவை நியமித்தது.

இதுகுறித்த அறிக்கையை அந்தக் குழு அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயிடம் சமர்பித்துள்ளதாகவும் மேலும், அரசியல்சாசன அமர்வில் இந்த தீர்ப்பு குறித்து சீராய்வு தாக்கல் செய்யலாமெனவும் பரிந்துரைத்தது.

இந்தக் குழுவின் அறிக்கையில் 40 க்கும் மேற்பட்ட சட்டநுணுக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடுக்காக கொண்டுவரப்பட்ட 103 வது அரசியல்சாசன திருத்தத்தைக் கணக்கில் கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 10), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஓபிசி பட்டியலை தயாரிப்பதற்கான அதிகாரத்தை மீண்டும் வழங்கும் திருத்தச் சட்டமானது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (ஆகஸ்ட் 10), செய்தியாளர்களிடம் பேசிய அசோக் சவான், “இட ஒதுக்கீட்டின் மீதான 50 விழுக்காடு என்ற உச்ச வரம்பை நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை தளர்த்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கும் என்று ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் கூறியிருந்தார். இதற்கு இதுதான் சரியான நேரம். மராத்தா சமுதாயம் இன்னும் எவ்வளவு காலத்திற்குதான் இட ஒதுக்கீட்டிற்காக சட்டப் போராட்டத்தை மேற்கொள்ளும்?” என்று கூறியுள்ளார்.

“இடஒதுக்கீட்டிற்கான மராத்தா சமுதாயத்தின் சட்டப் போராட்டத்தை ஒன்றிய அரசு எளிதாக்கியிருக்கலாம். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். ஆனாலும், அவர் இந்த பிரச்சினைக்காக குரல் கொடுத்தார். சிவசேனா உறுப்பினர்களான விநாயக் ராவத், பிரதாப்ராவ் ஜாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான சுப்ரியா சுலே மற்றும் காங்கிரசின் பாலு தனோர்கர் ஆகியோர் மராத்தா இடஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்தனர்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கூட, இட ஒதுக்கீட்டின் உச்ச வரம்பை தளர்த்தும் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பது  உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது என்று அசோக் சவான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஓபிசி திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, ​​காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இட ஒதுக்கீட்டின் மீதான 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்கக் கோரியுள்ளன.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

‘50 விழுக்காடுதான் இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு என்பதை ஒன்றிய அரசு தளர்த்த வேண்டும்’ – மகாராஷ்ட்ர முதலமைச்சர் வலியுறுத்தல்

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வுமனு – மகாராஷ்டிரா மாநில அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை

மராத்தா இடஒதுக்கீடு ரத்து; 50% கட்டுப்பாட்டை மறுபரிசீலினை செய்ய நீதிமன்றம் மறுப்பு; 69% இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்