விவசாய சட்டங்களை நீக்கக் கோரும் விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, கார் சக்கரத்தின் கீழ் நசுக்கப்பட்டு விவசாயிகளைக் கொன்றிருக்கிறார்கள். ஏன் விவசாயிகள் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கிறது? என்று பிரதமர் மோடியிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று(அக்டோபர் 6), இணையவழியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “மொத்த அரசு இயந்திரமும் விவசாயிகளைக் கொலை செய்தவர்களைப் பாதுகாக்க முயல்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரையும் ஏன் கைது செய்யவில்லை. கடந்த ஓர் ஆண்டாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது, கார் சக்கரத்தின் கீழ் நசுக்கப்பட்டு விவசாயிகள் கொல்லப்படுகிறார்கள். ஏன் விவசாயிகள் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கிறது?” என்று பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து மிஸ்ரா ஏன் இன்னும் நீக்கப்படவில்லை? இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இன்று விவசாயிகளுக்கு நீதி கோருகின்றனர். முடிவு உங்கள் கைகளில் உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக பிரதமர் தலையிட வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“விவசாயிகளைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது. லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்களை உத்தரபிரதேச அரசு அனுமதிக்கவில்லை. பிரதமர்ஜி, ஒருபுறம் அரசு ‘ஆசாதி கா மஹோத்ஸவ் (விடுதலை விழா)’ கொண்டாடுகிறது. மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர்கள் லக்கிம்பூர் செல்லும் வழியில் கைது செய்யப்படுகிறார்கள். இது என்ன வகையான சுதந்திரம்? ஆங்கிலேயர்கள்தான் இது போன்ற செயல்களைச் செய்தனர்” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.