சக்மா மற்றும் ஹஜோங் பழங்குடியினருக்கும் எதிராக இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டது குறித்தும், அவர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்தது குறித்தும் ஆறு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில அரசுக்கு தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சக்மா மற்றும் ஹஜோங் பழங்குடியினரின் மனித உரிமைகள் அனைத்து வழிகளிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும் அருணாச்சல பிரதேச மாநில அரசுக்கும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சக்மா டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (சிடிஃப்ஐ) அளித்திருந்த புகாரையடுத்து தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்தின் துணைப் பதிவாளர் கே.கே.ஸ்ரீவஸ்தவா, ஒன்றிய அரசின் உள்துறைச் செயலருக்கும் அருணாச்சலப் பிரதேச மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு
கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, சக்மா டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா தேசிய மனிதஉரிமைகள் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து 65,000 சக்மா மற்றும் ஹஜோங் பழங்குடியினர் சட்டவிரோத மக்கள் தொகை கணக்கெடுப்பின் வழியாக, அம்மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் இவ்விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும் என்றும் கோரியிருந்தது.
இது குறித்து, நேற்று(ஜனவரி 25), சக்மா டெவலப்மென்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா அறிக்கையில், 65,000 சக்மா மற்றும் ஹஜோங் பழங்குடியினரில், தோராயமாக 60,500 பேர் பிறப்பால் இந்திய குடிமக்கள் என்றும் 4,000 பேரின் குடியுரிமை கோரல் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
“முன்னதாக, 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சக்மா மற்றும் ஹஜோங் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் அணுகியது. 1996ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று, சக்மா மற்றும் ஹஜோங் பழங்குடிகளை இந்திய குடிமக்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்களின் குடியுரிமை விண்ணப்பங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. ஆனாலும், இப்பிரச்சனை இன்னும் தீரவில்லை” என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Source: NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.