Aran Sei

பெண் காவலரைத் தாக்கிய வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அர்னாப் மனுத்தாக்கல்

credits : pti

பெண் காவலரைத் தாக்கிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி முன் ஜாமீன் கேட்டு செஷன்ஸ் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வே நாயக்கைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் மகாராஷ்ட்ரா காவல்துறையால் கடந்த 4-ம் தேதி அர்னாப் கைது செய்யப்பட்டிருந்தார்.

ராய்கரைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் அர்னாப்பைக் கைது செய்ய முயன்றபோது அவர் ஒத்துழைக்காமல் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினார். இதனால் பெரும் போராட்டத்திற்குப் பிறகே காவல்துறையினர் அர்னாப்பைக் கைது செய்துள்ளனர் என மும்பை மிர்ரர்  செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அர்னாப் கோஸ்வாமி, அவருடைய மனைவி சயம்பத்ரா ரே மற்றும் அவர் மகன் ஆகியோர் மீது என் எம் ஜோஷி மார்க் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 353 (அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தாக்கியது), 504 (அவமதிப்பு மற்றும் வன்முறையைத் தூண்டியது), 506 (குற்றம் கருதி மிரட்டுவது), 34 (கூட்டு நோக்கத்துடன் குற்றத்தைச் செய்வது) ஆகிய பிரிவுகளில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பெண் காவலரைத் தாக்கிய வழக்கில் முன் ஜாமீன் வேண்டி செஷன்ஸ் நீதி மன்றத்தில் அர்னாப் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இன்று நீதிபதி வராததால், அர்னாப் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவின் விசாரணையை வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருப்பதாக அர்னாப்பின் வழக்கறிஞர் ஷ்யாம் கல்யாண்கர் கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வே நாயக்கைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (11/11/20) இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நேற்று மாலை நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கோஸ்வாமி, தற்போது மற்றொரு வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்