Aran Sei

அர்னாப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் – எதிர்ப்புகளுக்கிடையில் அவசர வழக்காக விசாரித்து உத்தரவு

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2018, மே 5-ம் தேதி, 53 வயதான கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வே நாயக் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலை குறிப்பில் ”அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் தனக்கு தர வேண்டிய 5 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தர மறுத்ததே இந்த முடிவிற்கு என்னை தள்ளியது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த தற்கொலை தொடர்பாக அன்வே நாயக்கினுடைய மனைவி அக்ஷிதா அளித்த புகாரின் பேரில் அர்னாப் மீது அலிபாக் காவல்துறை  முதல் தகவல் அறிக்கை (2018 ஆம் ஆண்டு) பதிவு செய்தது.

அந்தப் புகாரில் ”ரிபப்ளிக் டிவி அலுவலகத்தை வடிவமைத்துக் கொடுத்த அன்வே நாயக்கிடம், அவர் செய்த வேலைக்கான பணத்தை அர்னாப் தர மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2018-ம் ஆண்டு அலிபாக் காவல்துறையால் பதியப்பட்ட இந்த வழக்கு 2019-ம் ஆண்டு ராய்காத் காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதம் அர்னாபுக்கு எதிரான வழக்கை மறு விசாரணை செய்யும்படி மகாராஷ்ட்ரா அரசின் குற்றவியல் புலாய்வுத் துறை (சிஐடி)க்கு மகாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, காலை அர்னாப் கோஸ்வாமியை, அவர் வீட்டில் வைத்து மகாராஷ்ட்ரா காவல்துறையினர்  கைது செய்தனர்.

அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததற்காக அன்வே நாயக்கின் மனைவி மற்றும் மகள் மகாராஷ்ட்ரா அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் நீதிமன்றக் காவலில்  வைக்கப்பட்ட அர்னாப், அலிபாக் சிறை – தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் (அலிபாக் நகராட்சியால் நடத்தப்படும் பள்ளி) அடைக்கப்பட்டார். அலிபாக் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததை அடுத்து, தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.

தலோஜா சிறைக்குக் கொண்டு வந்தபோது பத்திரிகையாளர்களைப் பார்த்த அர்னாப் கோஸ்வாமி “என் வழக்கறிஞர்களுடன் பேச என்னை அனுமதிக்கவில்லை. என் உயிருக்கு ஆபத்து உள்ளது. தயவுசெய்து எனக்கு உதவ வேண்டும் என்று  நீதிமன்றங்களிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்.

பின்னர் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதி மன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி  தாக்கல்  செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்எஸ் ஷிண்டே, எம்எஸ் கார்னிக் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.

அதை எதிர்த்து  உச்சநீதி மன்றத்தில் அர்னாப் கோசுவாமி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை அதற்கு அடுத்த நாளே  விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மறுநாளே அவசர வழக்காக விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைக் கண்டித்து மூத்த வழக்கறிஞரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) தலைவருமான துஷ்யந்த் டேவ், உச்ச நீதிமன்றத்தின் செயலாளருக்கு கடிதம் எழுதினார்.

பல வழக்குகள் ஆண்டுக்கணக்காக விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும்போது அர்னாப்பின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்ததை டேவ் கடுமையாக கண்டித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அர்னாப் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சிறப்பு அனுமதியளித்துள்ளாரா? அல்லது தலைமை நீதிபதிக்கு தெரியாமல் நீங்கள் அனுமதியளித்திருக்கிறீர்களா என உச்ச நீதிமன்ற செயலாளரிடம் தன்னுடைய கடிதத்தில் டேவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

அர்னாப் கோஸ்வாமியின் கைதை ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தோடு ஒப்பிட்டு பேசிய டேவ், “மூத்த வழக்கறிஞரான ப.சிதம்பரத்தின் வழக்கு கூட இவ்வளவு விரைவாக விசாரிக்கப்படவில்லை. ப.சிதம்பரத்தின் மூன்று மாத சிறைவாசத்துக்குப் பிறகு தான் அவரை பிணையில் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது என்பதை டேவ் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏராளமான மனுக்கள் விசாரிக்கப்படாமல் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் சிறையில் அவதிப்பட்டு வருவதையும் டேஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, நவம்பர் 10 ஆம் தேதிக்கு முன்னர் வரை அவசர வழக்காக விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களின் பட்டியலை வெளியிடாமல் அர்னாப்பின் மனுவை  விசாரிக்கக்கூடாது என டேவ் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அர்னாப்புக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த் நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு ”இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் இது நம்மை அழிவின் பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும். இந்த மனிதனை (கோஸ்வாமி) மறந்து விடுங்கள். அவருடைய சித்தாந்தம் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். நான் கூட அவரது செய்தி சேனலை பார்க்க மாட்டேன்” என தெரிவித்ததாக பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

”மாநில அரசு ஒரு தனி நபரை குறி வைத்து செயல்பட்டால், அவரை உச்ச நீதிமன்றம் பாதுகாக்கும். தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தி அர்னாப்புக்கு ஜாமீன் வழங்கியதாக பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

நவம்பர் 4-ம் தேதி கைது செய்யப்பட்ட அர்னாப் 7 நாட்களுக்குப் பிறகு இன்று ஜாமீனில் விடுதலையாகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்