Aran Sei

‘என்னை உங்களால் எதுவும் செய்ய முடியாது’ – உத்தவ் தாக்கரேவிற்கு அர்னாப் சவால்

credits : the indian express

”நான் சொல்வதை கவனியுங்கள் உத்தவ் தாக்கரே, நீங்கள் படுதோல்வி அடைந்து விட்டீர்கள்” என பிணையில் வெளிவந்துள்ள அர்னாப்  மகாராஷ்ட்ரா முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வே நாயக்கைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் மகாராஷ்ட்ரா காவல்துறையால் கடந்த  4-ம் தேதி கைது செய்யப்பட்டு 7 நாட்களுக்குப் பிறகு நேற்று (11/11/20) அர்னாப் கோஸ்வாமி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராய்காத் மாவட்ட, தலோஜா சிறையில் இருந்து நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் வெளிவந்த அர்னாப் கோஸ்வாமிக்கு வழியெங்கும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தன்னுடைய ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தார், பிணையளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த அவர் “ இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியுட்டுள்ளது.

அங்கிருந்து லோயர் பரலில் உள்ள ரிபப்ளிக்கின் செய்தி அலுவலகத்திற்கு சென்று அவருடைய சக ஊழியர்களின் முன் பேசிய அர்னாப் தன் கைதுக்குக் காரணமான மகாராஷ்ட்ரா அரசாங்கத்தையும், மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங்கையும் கடுமையாக சாடியுள்ளார். இதை ரிபப்ளிக் தொலைகாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

”இது சட்டவிரோதமான கைது நடவடிக்கை. ஒரு பொய்யான புணையப்பட்ட வழக்கில் கைது செய்துவிட்டு, இன்னும் உத்தவ் தாக்கரே அதற்காக என்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை” என கூறியுள்ளார்.தலோஜா சிறையில் இருக்கும்பொழுது ஒரு நாளைக்கு மூன்று முறை காவல்துறையால் விசாரிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

”இந்த ஆட்டம் இப்பொழுது தான் ஆரம்பம் ஆகியிருக்கிறது . இனி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் ரிபப்ளிக் தொலைகாட்சியைக் கொண்டு வருவேன் . உலகத்தில் இருக்கும் சர்வதேச செய்தி நிறுவனங்களுள் ஒன்றாக இதை மாற்றுவேன்” என உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அர்னாப் சூளுரைத்துள்ளார்.

”நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும், சிறையில் இருந்த படி என்னுடைய நிறுவனத்தை நடத்துவேன், உங்களால் ( உத்தவ் தாக்கரே) என்னை எதுவும் செய்ய முடியாது” என  அவர்உறுதியளித்துள்ளார்.

இறுதியாக அர்னாப் ”ஜெய் மகாராஷ்ட்ரா” எனும் கோஷமிட்டு தன் உரையை முடித்துள்ளார்.

ஒருவருடைய கருத்தில் நமக்கு வேறுபாடுகள் இருந்தாலும் தனி மனித சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும என அடிப்படையில் அவரை பினணயில் விடுவிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அவரை விடுவித்துள்ளது .

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்