Aran Sei

‘அரியலூர் மாணவி தற்கொலை: அவதூறு பரப்பும் மதவாத சக்திகள் – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வேண்டுகோள்

ரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அவர்களது முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வர் அண்மையில் அகில இந்திய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தார். அது வரவேற்கக்கூடிய ஒன்று, அந்த நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்று பாராட்டினோம். மிக சீரிய முயற்சி, அதுவும் சனாதன சக்திகள் கொட்டமடிக்கிற இந்த சூழலில், சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து, முதல்வர் முன்னெடுத்திருக்கிற இந்த முயற்சி அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அதேபோல், அரியலூர் மாணவி தற்கொலை பிரச்சினையில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அவர்களது முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை ஒதுக்க வேண்டும்; பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைவர், துணை தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிறபோது, விடுதலை சிறுத்தைகளுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றில் பெண்களுக்கு 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய நிலைப்பாடு போற்றுதலுக்குரியது. இதற்கு சமூகத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பெண்களிடத்தில் மிகப்பெரிய அளவில் உற்சாகம் உருவாகியிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்