Aran Sei

அறிவியல் மாநாட்டில் மத பிரச்சார அமைப்புகளா? – சு.வெங்கடேசன் கேள்வி

அறிவியல் மாநாட்டினை அறிவியலுக்கு எதிரான அமைப்புகளோடு இணைந்து நடத்துவதா என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தங்களின் 7-12-2020 தேதியிட்ட கடிதம் தொடர்பாக இதை எழுதுகிறேன். அக்கடிதத்தில் 2020 டிசம்பர்  22 முதல் 25 வரை மெய்நிகர் நிகழ்வாக நடைபெறவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிற்கு 5 ஆசிரியர்களையும், 50 மாணவர்களையும் பரிந்துரைக்குமாறு வேண்டப்பட்டுள்ளேன். இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஈடுபடுத்துவது நல்ல முன்னெடுப்பு. இருப்பினும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சம்பந்தமான விவரங்களை ஆழ்ந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன். ” என்று தெரிவித்துள்ளார்.

கேரள ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோல்வால்கரின் பெயர் – வலுக்கும் எதிர்ப்பு

இந்த நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளில் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் கழகம் (CSIR), அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றோடு விஞ்ஞான பாரதி (VIBHA) என்ற அரசு அல்லாத ஓர் நிறுவனமும் இணைந்து நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மேற்கோள்காட்டியுள்ளார்.

இந்திய சர்வதேச திருவிழாவின் முதன்மையான நோக்கமாக, சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் அறிவியல் முனைப்பை வளர்ப்பது, இளம் உள்ளங்களில் அறிவியல் ஞானம் மற்றும் கருத்துக்களை பகிர்வது, அறிவியல் – தொழில் நுட்பம் – கண்டுபிடிப்புகள் குறித்த அண்மைக் கால வளர்ச்சிப் போக்குகள் மற்றும் அதற்கான இந்தியப் பங்களிப்புகளைக் காட்சிப்படுத்துவது உள்ளிட்டவற்றை “சுயசார்பு இந்தியா மற்றும் உலக நலன்” என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு முன்னிறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

’பொறியியல் கல்வியை காவிமயமாக்குவது முன்னேற்றமல்ல’- கமல்ஹாசனுக்கு பதிலடி

இந்த அறிவியல் திருவிழாவின் அறிவிக்கப்பட்ட லட்சியத்திற்கு முற்றிலும் எதிராக இயங்குகிற ஓர் அரசு சாரா அமைப்பான விஞ்ஞான பாரதியை இதில் இணைத்திருப்பது வேதனைக்குரியது என்றும் அந்த அமைப்பின்  செயல்பாடுகள் அறிவியல் முனைப்புடன் இருக்கிறதென்ற நம்பிக்கையை தருவதாக இல்லை கூறிய அவர், மதச் சார்பின்மை விழுமியங்களைக் கொண்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டதாகவும் இல்லை என்றும் மக்களின் மத உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தி போலி அறிவியலைப் பிரச்சாரம் செய்கிற அமைப்பாகவும் இது இருக்கிறது என்பதே பரவலான கருத்தாக இருக்கிறதென்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அறிவியல் உலகளாவியது. அது சீராக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மக்களைப் பிரிக்கிற சிந்தனைகளுக்கு  இடம் தராமல், சமூகத்தின் பொது நலனுக்கு அதைப் பயன்பட செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

“மனுநீதியே ஆட்சி செய்கிறது” – ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த்

”மும்பையில் 2015 இல் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் விஞ்ஞான பாரதி அமைப்பின் தலைவர் விஜய் பாட்கர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்பது அப்போதைய செய்தி. அவரே ஒரு மதிப்புமிக்க பல்கலைக் கழகத்தின் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட போது, சர்ச்சைகள் எழுந்த காரணத்தால் இந்தியக் குடியரசுத் தலைவரால் அம்முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது என்பதும் ஊடகங்கள் தந்த இன்னொரு செய்தி.” என்று விஞ்ஞான பாரதி அமைப்பின் தலைவர் விஜய் பாட்கர் மீதான சர்ச்சசைகளை பட்டியலிட்டுள்ளார்.

”மேற்கூறப்பட்ட மும்பை மாநாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய ஆய்வுத் தாள் சமர்ப்பிக்கப்பட்டதையும் நினைவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆகாய விமானங்கள் ஆதி இந்தியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதென்றும், அத்தகைய தொழில் நுட்பத்தை வளர்த்தெடுத்து பிரதமரின் ’மேக் இன் இந்தியா’ முன்முயற்சி யின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளை உருவாக்குமாறும் அந்த ஆய்வுத் தாள் கூறியிருந்தது. இது ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இது போன்ற போலி அறிவியல் கருத்துக் களையும் மற்றும் இது போன்ற கருத்துக்களை கொண்டுள்ள நபர்களால் தலைமை தாங்கக்கூடிய  அமைப்புகளையும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான நிறுவனங்களுக்குள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஐஐடியில் இடஒதுக்கீடு மறுப்பு `மநு’வை நடைமுறைப்படுத்தும் திட்டம் – திருமுருகன் காந்தி

நாக்பூர் வேர்களைக் கொண்ட இந்த அரசு சாரா அமைப்பை மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஊடுருவ அனுமதிப்பதன் குறுகிய நோக்கம், இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்கே என்றும் இது அறிவியல் திருவிழா என்ற திரையின் பின்னால் செய்யப்படுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது என்றும் தன் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஆர்எஸ்எஸ்-ன் யுபிஎஸ்சி ‘யாகம்’ – சீ.நவநீத கண்ணன்

“நமது அரசியல் சாசனம், அறிவியல் முனைப்பை இந்தியச் சமூகத்தில் உருவாக்க வேண்டுமென்று நமக்கு கட்டளை விடுத்துள்ளது. விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை ஈடுபடுத்துவது இக்கட்டளையின் சீவனை மறுதலிப்பது ஆகும்.” என்றும் ”நம் தேசத்தின் எதிர் காலத் தலைமுறை அறிவியல் சிந்தனை கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டுமென்று உள்மார விழைகிறேன். அத்தகைய உண்மையான உணர்வோடு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு  துணை நிற்க எப்போதும் தயாராக இருக்கிறேன்.” என்றும் உறுதியளித்துள்ளார்.

”எனது கருத்துக்களை உரிய முறையில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை இது போன்ற அறிவியல் சார்ந்த நிகழ்வுகளில் அரசு ஈடுபடுத்துவதை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன்.” என்று சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்