Aran Sei

Aransei Explainer: மாதவிடாய் – பாஜக எம்எல்ஏக்களும் போராடும் விவசாயிகளும்

மாதவிடாய் காலத்துல பெண்களுக்கு முதல் ஒரு நாள் விடுமுறை அளிக்கணும்னு ஒரு எம்எல்ஏ கோரிக்கை வைக்கிறார்.

காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங் இந்த கோரிக்கைய ஒரு மசோதாவ உருவாக்கி அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

ஆனா, இந்த மசோதா விவாதத்திற்குத் தகுதியானது இல்லைனு சொல்லி திரும்பப் பெறப்பட்டுச்சு.

இந்த மசோதாவ எதுக்காக நினோங் எரிங் கொண்டுவந்தார். அதுக்கு சட்டப்பேரவையில என்ன மாதிரியான விவாதங்கள கிளப்புச்சுனு பாப்போம்.

அருணாச்சல பிரதேசத்துல மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கு. கடைசியா 2019ல நடந்த தேர்தல்ல 48 இடங்கள கைப்பற்றுன பாஜக ஆட்சிய புடிச்சது. பெமா காண்டு முதலமைச்சரா இருக்கார்.

இந்நிலையில, மார்ச் 15ஆம் தேதி, அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில ஒரு மசோதா கொண்டு வரார். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு போகும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்துல முதல் ஒரு நாள் விடுமுறை அளிக்கணும்னு காங்கிரஸ் எம்எல்ஏ நினோங் எரிங் அந்த மசோதா தாக்கல் செய்யுறார்.

அதுக்கு அவர் என்ன விளக்கம் தரார்னா, “இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளும், பீகார், கேரளா போன்ற மாநிலங்களும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு கொடுக்கப்பட்டால், பெண்கள் தங்களது வேலைகளை இன்னும் சிறப்பாகச் செய்ய உதவும்” என்று நினோங் எரிங் சபையில சொல்லிருக்கார்.

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. அத வரிசையா பாப்போம்.

“புனிதமான சட்டப்பேரவையில் அசுத்தமான விஷயமான மாதவிடாய பத்தி பேச வேண்டாம், எங்கள் சமூகத்தில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலத்தில் சமையல் அறைக்கு அருகில் கூட வரமாட்டார்கள். அங்கிருந்து வெகு தொலைவில் தூங்குவார்கள். அந்த நேரத்தில் யார் அருகிலும் பெண்கள் வர மாட்டார்கள்”னு பாஜக எம்எல்ஏ லோகம் தாசர் கூறியிருக்கார்.

இன்னொரு பாஜக எம்எல்ஏவான தனா ஹாலி, “பெண்கள் தங்களது அசுத்தமான மாதவிடாய் காலத்தில், ஆண்களுடன் சேர்ந்து உணவு உண்ண மாட்டார்கள். பீகார், கேரளா மாநிலங்கள் வேண்டுமானால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கலாம், ஆனால் அருணாச்சலப் பிரதேசத்தில் அதற்கு இடமில்லை”னு சொல்லிருக்கார்.

இன்னொரு பாஜக எம்எல்ஏ நியாடோ ரிகியா பேசுனதுதான் ஹைலைட், “பெண்கள் மாதவிடாயைப் பற்றி பொய் சொல்லி விடுமுறை எடுக்க வாய்ப்புண்டு”னு சொல்லி, அந்த மசோதாவ நிராகரிச்சுருக்கார்.

இதுக்கடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அலோ லிபாங் பேசும்போது, “பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு கொடுப்பதற்கான மசோதாவைப் பெண்கள் அமைப்புகள் மற்றும் மாநில மகளிர் குழுவுடன் விவாதித்து இந்த மசோதா பொருத்தமானதா என்று சரிபார்க்கப்படும். மேலும், மாதவிடாய் காலத்தில் வலி மற்றும் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பெண்களுக்கு நிவாரணம் அல்லது சிறப்பு வசதிகளை வழங்குவதற்கான வழிகள் ஆராய்ப்படும்”னு சொல்லிருக்கார்.

மாதவிடாய அசுத்தம்னு அருணாச்சல பிரதேச பாஜக மட்டும் சொல்லல. ஒன்றிய அரசோட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையோட தற்போதைய அமைச்சர் ஸ்மிருதி ராணியும் பேசியிருக்காங்க.

2018ல சபரிமலைக்குள்ள பெண்கள் போகுறது சம்பந்தமான விஷயம் பேசுப் பொருளா இருந்தப்ப அவுங்க என்ன சொன்னாங்கனா, “மாதவிடாய் காலத்துல ரத்தம் தோய்ந்த சானிட்டரி நாப்கின்னோட ஒரு நண்பர்கள் வீட்டுக்கு போவீங்களா? மாட்டீங்கள்ல. அப்ப அதே மரியாதை கடவுளின் வீடான கோயிலுக்கு போகும் போதும் இருக்கணும்னு” சொன்னார். இது பல கண்டங்கள உருவாக்குச்சு.

அருணாச்சல பிரதேசம்: ‘புனிதமான சட்டப்பேரவையில் அசுத்தமான மாதவிடாய் குறித்து பேசாதீர்கள்’ -பாஜக எம்எல்ஏ

நாப்கின் அத்தியாவசிய பொருளாச்சே அத ஏன் இவ்ளோ ஒதுக்குறாங்கனு உங்களுக்கு கேள்வி வரலாம். ஆனா, மொத மொத ஜிஎஸ்டிய அமல்படுத்துன பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மாதவிடாய் காலத்துல பெண்கள் பயன்படுத்துற நாப்கின்ன அத்தியாவசிய பொருள்கள் பட்டியல்ல சேக்கல. நாப்கின்ன ஆடம்பரப் பொருட்கள் பட்டியல்லதான் சேத்துருந்தாங்க. அதுக்கு 12 விழுக்காடு வரியும் விதிச்சாங்க.

“ஆண்கள் பயன்படுத்துற ஆணுறைகள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியல்ல சேக்கும்போது, சானிடரி நாப்கின்கள ஏன் ஆடம்பர பட்டியல்ல சேர்த்தீங்கனு”னு நாடு முழுதும் கண்டனம் வந்துச்சு. போராட்டங்கள் நடந்துச்சு. அதுக்கு பிறகுதான் அந்த 12 சதவீத வரி ரத்து செய்யப்பட்டது.

சானிடரி நாப்கின்கள பத்தி பேசும்போது எனக்கு விவசாயிகள் போராட்டத்துல நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வருது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்கள நீக்கக் கோரி டெல்லி எல்லைல விவசாயிகள் ஓர் ஆண்டுக்கு மேல பெரிய போராட்டங்கள பண்ணாங்க. அத பத்தி உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்.

அந்த நேரத்துல ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டக் களத்த நோக்கி வந்துட்டு இருந்தாங்க. பெண்கள், குழந்தைகள்னு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் நாடு முழுவதும் இருந்து வந்தாங்க. போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, சுகாதார பிரச்சினை எழுந்துச்சு.

முக்கியமா பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.

சுகாதார பிரச்சினைகளோட மாதவிடாய் பிரச்சினையும் வந்தனால தண்ணீரும் அவசியமான ஒன்னா மாறுச்சு. இது குறித்து டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கிட்டயும், மாநகராட்சிக்கிட்டயும்,  சமூக செயற்பாட்டாளர்களும், போராடும் விவசாயிகளும் புகார் அளிச்சாங்க. ஆனா எந்த பலனும் இல்ல.

இந்த சுகாதாரமின்மை காரணமா, சில சிறுமிகளுக்கு நோய் தொற்று ஏற்படுதுனு பெண் விவசாயிகள் சுட்டிக்காட்டுனாங்க.

இதுக்கு அப்புறம் முழிச்சுக்கிட்ட விவசாயிகள் சங்கங்கள் இதுக்கு ஒரு தீர்வு காண முடிவு பண்ணாங்க.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் – குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவு

கல்சா எய்ட் என்ற தொண்டு நிறுவனத்தோட உதவியோட இதுக்கு ஒரு தீர்வு காண்டாங்க. ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு நடுவுல சிறிய அளவுல கழிப்பறைகள அமைச்சாங்க. பெண்களுக்கு ஒரு ப்ரைவசிய உண்டு பண்ணாங்க. தண்ணீர் வசதியையும் உறுதிப்படுத்துனாங்க. பெண்களுக்கு நாப்கின்கள் கொடுத்தாங்க.

அமெரிக்காவை சேர்ந்த இதய நோய் நிபுணர் ஸ்வைமன் சிங் என்பவரும் போராடும் விவசாயிகளுக்கு உதவியா களத்துல இருந்தார். அவர் தி வயர் இணையதளத்துக்கிட்ட பேசும்போது, “எங்களுடைய குழு மருந்துக்களயும், சேனிடரி நாப்கின்களயும் கொடுக்குறாங்க. போராடுபவர்களுக்கு தேவையான மருந்துக்களையும் சானிட்டரி நாப்கின் மாதிரியான அத்தியாவசிய பொருட்களையும் சுற்றுவட்டார பகுதியில இருக்க மக்கள் நன்கொடையாக கொடுக்குறாங்க. நாங்க அத தேவைப்படுறவுங்களுக்கு கொடுக்குறோம்”னு சொன்னாங்க.

மாதவிடாய் சம்பந்தமா பொது சமூகத்துலருக்க அவதூறுகள களத்துல போராடுன மக்கள் உடைத்து எறிஞ்சதா களத்துல இருந்த பெண்கள் சொல்றாங்க.

“மாதவிடாய் என்ற விஷயத்தை சுற்றி ஒரு அவமானம் பொதுவாக உள்ளது. அத அசுத்தமாவும் தீட்டாவும் பாப்பாங்க. ஆனா விவசாயிகள் போராட்டத்துல அத உடச்சுருக்காங்க.  சானிடரி நாப்கின்களை பைகளில் போட்டு மறைக்காமல், வெளிப்படையா கொடுப்பத பார்க்க சந்தோஷமாக இருக்குது. இந்த விஷயத்துல ஆண் விவசாயிகள் பெண் விவசாயிகளுக்கு உதவுனாங்க. இது போராட்டம் மேலும் வலுப்பெற உதவுச்சு”னு போராட்டத்தில் பங்கேற்ற 23 வயதான குர்லீன் கௌர் தி வயர் இணையதளத்துக்கிட்ட பேசும்போது குறிப்பிட்டாங்க.

ஆக, சட்டப்பேரவையில் உக்காந்துருக்க எம்எல்ஏக்களும், ஒன்றிய அமைச்சரும், தங்களோட கோரிக்கைக்காக களத்துல எறங்கிப் போறாடுற மக்களும் மாதவிடாய்-ங்குற விஷயத்தயும் சானிட்டரி நாப்கின்ன்ற விஷயத்தையும் எப்டி வெவ்வேறு கண்ணோட்டத்துல பாக்குறாங்கனு இப்ப நம்மலால புரிஞ்சுக்க முடியும்.

  • அரவிந்ராஜ் ரமேஷ்
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்