Aran Sei

பெங்களூரு தொழிற்சாலையில் வன்முறை – ஆப்பிள் நிறுவனம் நடத்தும் விசாரணை

Image Credits: The Indian Express

பெங்களூருக்கு அருகில் விஸ்ட்ரான் கார்ப் எனும் தைவான் நிறுவனம் ஒன்று ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஸ்ட்ரான் கார்ப் நிறுவனம், விநியோகர்களுக்கான வழிகாட்டுதல்களை மீறியுள்ளதா என்ற கோணத்தில் ஆப்பிள் நிறுவனம் விசாரித்து வருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், நரசபுரா நகரில், தைவானைச் சேர்ந்த, விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் ‘ஐபோன்’ பாகங்கள், ‘லெனோவா, மைக்ரோசாப்ட்’ நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவை இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.இங்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊதிய பிரச்சனை தொடர்பாக சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்தது. இதில், தொழிற்சாலை கட்டடம் இடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்கள் எடுத்துள்ள வீடியோ காட்சிகளில் தொழிற்சாலைக்குள் பாதுகாப்பு கேமராக்கள், ஜன்னல்கள் மற்றும் பிற உபகரணங்களை கட்டைகளை கொண்டு உடைப்பது பதிவாகியுள்ளது.

வன்முறையில் தொடர்புடைய 149 பேரைக் கைது செய்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூடுதல் ஊழியர்களையும் தணிக்கையாளர்களையும் இந்தத் தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“எங்கள் குழுக்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன, நாங்கள் அவர்களின் விசாரணைக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம்” என்று விஸ்ட்ரான் கார்ப் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணி சூழ்நிலையை வழங்க வேண்டும், தொழிலாளர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும், நியாயமாகவும் நெறிமுறையுடனும் செயல்பட வேண்டும், பொருட்கள் தயாரிக்கப்படும் இடத்தில் சுற்றுசூழல் பாதிக்கப்படாத அளவிற்கு செயல்பட வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை ஆப்பிள் நிறுவனம் அதன் விநியோகஸ்தர்களுக்கு வழங்குகின்றது.

“நடைபெற்றுள்ள வன்முறையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இதனை அடையாளம் தெரியாத நபர்கள்… தெளிவற்ற நோக்கங்களுடன் செய்துள்ளதாக” விஸ்ட்ரான் கார்ப் தெரிவித்துள்ளது.

“நாங்கள் எப்போதும் சட்டத்தைப் பின்பற்றுகிறோம், விசாரணைக்கு எப்போதும் ஒத்துழைப்போம்” என்றும் விஸ்ட்ரான் கார்ப் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்