Aran Sei

சம்பளம் வழங்காததால் தொழிற்சாலையில் கலவரம் – தொழிலாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்

ப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனம், அதன் பெங்களூரு ஐஃபோன் தொழிற்கூடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் செய்ததைத் தொடர்ந்த சர்ச்சைக்குள்ளாகியது. இப்போது, தொழிலாளர்களில் சிலருக்கு முறையாகவும், சரியான நேரத்திற்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஏற்றுக் கொண்டுள்ளது. 

இந்தியாவில் ஐஃபோன்கள் தயாரிக்கும் தைவான் நிறுவனமான விஸ்ட்ரான், இந்தியாவின் வணிகத்தை கவனித்துக் கொள்ளும் துணைத்தலைவரை பதவிநீக்கம் செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 

“நரசபுரா தொழிற்கூடத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுக்கு பிறகு, நாங்கள் விசாரணை நடத்த தொடங்கினோம். சில ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்கப்படவில்லை, சரியான நேரத்திற்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பது தெரிந்தது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம், அனைத்து தொழிலாளர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்” என அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

“இந்திய நிறுவனத்தை செயல்பாட்டை கவனித்துக் கொள்ளும் துணை தலைவரை பணி நீக்கம் செய்கிறோம். இது போன்ற பிரச்சினைகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு, எங்கள் குழுக்களை மறுவடிவமைப்பு செய்கிறோம், எங்கள் செயல்பாடுகளை மேம்படுத்துகிறோம். தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு நிவாரணமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுக்கு இப்போது முக்கியம். அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று விஸ்ட்ரான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட வேறொரு அறிக்கையில், விநியோக நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நடத்தை விதிகள் மீறப்பட்டிருப்பதாக, ஆப்பிள் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை, விஸ்ட்ரான் நிறுவனத்திடம் ஆப்பிள் வணிகத்தில் ஈடுபடாது எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஆப்பிள் ஊழியர்களும், சுயாதீன தணிக்கை அதிகாரிகளும், விஸ்ட்ரானின் செயல்பாட்டை மேற்பார்வை செய்வார்கள். அனைத்து தொழிலாளர்களும் மரியாதையோடும், மதிப்போடும் நடத்தப்பட வேண்டும், முறையான நிவாரணம் உடனடியாக கொடுக்கப்பட வேண்டும் என்பதுவே எங்களுடைய முக்கியமான குறிக்கோள் என்றும் அறிக்கையில் ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

டிசம்பர் 12 ஆம் தேதி , வெளி நிறுவனத்தால் பணியமர்த்தப்படும்,  விஸ்ட்ரானின் முழு நேர தொழிலாளர்கள் மற்றும் பகுதி நேர தொழிலாளர்கள், மோசமான வேலை சூழல் மற்றும் சம்பளம் முறையே கொடுக்கப்படாததை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டம் சில நிமிடங்களிலேயே வன்முறையாக மாறியது. சில தொழிலாளர்கள் அலுவலக கட்டமைப்பையும், ஃபர்னிச்சர்களையும் தாக்கி சேதம் செய்ய தொடங்கினர். தொடக்கத்தில்,  முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போது, சேதமானவற்றின் மதிப்பு நானூறு கோடி ரூபாய் என்ற நிறுவனம், பிறகு 41 கோடி ரூபாய் என அந்த தொகையை மாற்றி சொன்னது. 

விஸ்ட்ரான் நிறுவனத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விஸ்ட்ரான் நிறுவனத்தில் வெடித்த இந்த பிரச்சினை, தேசிய அளவிலான கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், சீனாவை விட்டு வெளியேற நினைக்கும் நிறுவனங்களை கவர்வதற்கு என இருக்கும் நரேந்திர மோடி அரசின் பெருமை, விஸ்ட்ரான் நிறுவனம்.

செப்டம்பர் மாதம், இந்தியாவில் நேரடியாக விற்பனை செய்ய ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் ஒன்றை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம். பெருந்தொற்றின் தொடக்கத்தில் 2000 ஆக இருந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை, கடந்த எட்டு மாதங்களில் 9000 ஆகியுள்ளது. 

விஸ்ட்ரான் நிறுவனம், தங்கள் அலுவலகத்தில் 1,343 நிரந்தர ஊழியர்களும், 8,490 ஒப்பந்த ஊழியர்களும் இருப்பதாக சொல்கிறது. 

கலவரத்திற்கு பிறகு,கர்நாடகா தொழிலாளர் துறையின் கோலார் வட்டம் தயாரித்த அறிக்கையில், விஸ்ட்ரான் நிறுவனம் வருகை பதிவேடும், சம்பள பதிவேடும் வைத்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில தொழில்துறை அமைச்சர் ஷிவ்ராம் ஹெப்பர், “ சில ஒப்பந்தகாரர்கள், தொழிலாளர்களின் சம்பளத்தை மூன்று மாதங்களாக கொடுக்காமல் இருந்தது தான் வன்முறைக்கு காரணம்” என சில பத்திரிக்கைகளிடம் தெரிவித்துள்ளார். 

“சிலர், வெறும் 50 நிமிட இடைவேளை கொடுத்துவிட்டு, 8 முதல் 12 மணி நேரம் வரை வேலை வாங்குவதாகவும் புகார் அளித்துள்ளார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார். 

மிண்ட்(Mint) இணையதளத்தில் இந்த வாரத்தில் வெளியான ஒரு கட்டுரை, தொழிலாளர்களை பணியமர்த்திய ஆறு நிறுவனங்கள் முறையாக சம்பளம் கொடுக்காததற்காக தடை செய்யப்படலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத ஆறு அரசு அதிகாரிகள் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளது. 

அரசியல் பின்னணி 

இந்த கலவரங்களுக்கு பின்னே இந்திய மாணவர்கள் அமைப்பு [ Students’ Federation of India (SFI) ]  இருப்பதாக உள்ளுர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததும், கலவரத்திற்கு அரசியல் சாயம் வந்தது. 

“அது யார் என்றெல்லாம் எங்களுக்கு கவலையில்லை, இது எங்கள் மாவட்டத்தின் எதிர்காலம் குறித்தது என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு 6,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இங்கே நிறுவனங்கள் அமைக்கப்படும் போது, எஸ்.எஃப்.ஐ போன்ற அமைப்புகள் அவர்களை பயமுறுத்தி இங்கே முதலீடு செய்யவிடாமல் விரட்ட முயற்சிக்கிறது. எல்லா வீடியோ காட்சிகளும், சாட்சியங்களும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. காவல்துறை மேலதிகாரியிடமும், மாவட்ட அதிகாரிகளிடமும் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். தவறு செய்யாதவர்களை விட்டுவிடுவோம், ஆனால், குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது” என கோலாரை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.முனிசுவாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

இந்திய மாணவர் சங்கத்தின் கோலார் தாலுகா தலைவரான ஸ்ரீகாந்த்,  கோலார் காவல்துறையால் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், விசாரணைக்கு பிறகு வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டார். 

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்