Aran Sei

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீராய்வு – மௌன போராட்டம் நடத்த அப்னி கட்சி முடிவு

ம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி டிசம்பர் 29 ஆம் தேதி கருப்பு முகமூடியுடன் மௌனப் போராட்டத்தை நடத்தவுள்ளது.

டிசம்பர் 20 அன்று, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், ஜம்முவுக்கு 43 தொகுதிகள் (முன்னதாக 37) என்றும், காஷ்மீருக்கு 47 தொகுதிகள் (முன்னதாக 36) என்றும் எல்லை நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது.

இப்பரிந்துரைக்கு ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தொகுதி மறுசீராய்வு – பிரித்தாளும் சூழ்ச்சி எனக்கூறி குப்கர் கூட்டணி போராட்டம்

இப்பரிந்துரைகளை எதிர்த்து, ஜனவரி 1 அன்று, அமைதிவழிப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஆறு கட்சியை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியும் எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

இப்போராட்டம் குறித்து பேசியுள்ள அக்கட்சியின் தலைவர் அல்தாஃப் புகாரி, “ஆணையத்தின் பரிந்துரையை நாங்கள் நிராகரிக்கிறோம். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. காஷ்மீர் மற்றும் ஜம்முவுக்கு இடையே பிளவை உருவாக்கும் முயற்சி இது. இதில் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தொகுதி மறு சீராய்வு – உச்ச நீதிமன்றத்தை நாடும் குப்கர் கூட்டணி

எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 29-ம் தேதி கருப்பு முகமூடி அணிந்து மௌனப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு உட்பட சில அளவுகோள்களை ஆணையம் பின்பற்றியிருக்க வேண்டும். அதே நேரத்தில் சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகளை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். மொத்த ஆணையமும் ஒரு கட்சிக்காக வேலை செய்கிறது என்றால், அதைவிட வேதனை தரும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று அல்தாஃப் புகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பாஜக இந்நாட்டின் ஒரே பாதுகாவலர் அல்ல. இதுபோன்ற செயல்கள் நடக்கும்போதுதான், ஒன்றுப்பட்ட மற்றும் மதச்சார்பற்ற இந்தியா என்ற எண்ணம் தோற்கடிக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்