எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு இடையே, கர்நாடகா பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு சட்டம்,2020, குரல் வாக்கெடுப்பின் வழியே அம்மாநில சட்ட மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு இல்லாததால், சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த மசோதாவை சட்ட மேலவையில் நிறைவேற்ற ஆளும் பாஜகவால் முடியாமல் போனது.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 8) இந்த மசோதா மீண்டும் சட்ட மேலவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 9) நடைபெறவுள்ள மேலவை தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இம்மசோதாவை எதிர்த்தன என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
`கோமாதா நம்முடைய மாதா’ – கர்நாடகாவில் அமலாகப்போகும் பசுவதை தடுப்புச் சட்டம்
இந்த மசோதா குறித்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விவாதத்திற்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். இருப்பினும், துணை சபாநாயகர் எம்.கே.பிரனேஷ், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், இந்த மசோதாவுக்கு இன்றே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
மசோதா மீதான விவாதம் மறுக்கப்படுவதை எதிர்த்து பேசிய மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர் மரிட்டிபே கவுடா, இந்த மசோதா மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட வேண்டும் அல்லது அனைவருக்கும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய போதும், துணை சபாநாயகர் பிரனேஷ், விவாதத்தை இரவு 7.30 மணி வரை மட்டுமே அனுமதித்துள்ளார்.
இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்
அதைத் தொடர்ந்து, துணை சபாநாயகர் பிரனேஷ், மசோதா மீதான வாக்களிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் சட்ட மேலவையின் மைய பகுதிக்கு சென்று மசோதாவின் நகல்களைக் கிழித்து எறிந்துள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் சபாநாயகர் மேசைக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் இட்டுள்ளனர். மறுபுறம், ஆளும் பாஜகவின் உறுப்பினர்கள் ‘கோமதா கி ஜெய்’ என்ற முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே
இதற்கிடையில், துணை சபாநாயகர், கர்நாடகா பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டது என்று அறிவித்து, சட்ட மேலவையை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) வரை ஒத்திவைத்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினரான பி.கே.ஹரிபிரசாத் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “பாஜக முரட்டுத்தனமாக இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சியினர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) இதற்கு எதிராக போராட்டத்தை தொடர்வார்கள்.” என்று கூறியுள்ளார்.
`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்
மேலும், “காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜக சட்டசபையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் கட்சி அல்ல. மேலும், மசோதாவிற்கு எதிர்ப்புகளும் எழுந்தன. இந்நிலையில், பாஜகவால் குரல் வாக்கெடுப்பு வழியாக மசோதாவை எவ்வாறு நிறைவேற்ற முடியும்?” என்று ஹரிபிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.