கடந்த நவம்பர் மாதம், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அசோக் குமார் தியாகி அவருடன் வேலை செய்து வரும் நதீம், தன் மனைவி பரூலுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி பரூலை மதமாற்றம் செய்ய முயல்வதால் நதீமை சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மன்சூர்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
இதையடுத்து நதீம் மீது சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 504 மற்றும் 506-ன் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து நதீம் அலகாபாத் உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்ததார். கடந்த டிசம்பர் 19-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை கைது செய்ய ஜனவரி 7-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர். மேலும் அவரை கைது செய்வதற்கான தடையை ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.
சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கைதுக்கு நீதிமன்றம் தடை விதிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் அவதேஷ் பாண்டே சமர்பித்த அறிக்கையில் நதீம், பரூலுடன் தகாத உறவு வைத்திருந்ததற்கோ, பரூலை இஸ்லாமியராக மதமாற்றம் முயன்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ரத்து செய் : நூறு முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதமாற்றம் செய்ததாக நதீம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய பரூல், தன்னுடைய கணவர் தியாகி தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கொடூரமாக துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் நதீம் உறுதுணையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை
பரூல் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது கணவருக்கு எதிராக காவல்நிலையத்தில் அளித்த புகாரை சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
தியாகியின் தொந்தரவுகள் குறித்து பல நண்பர்களிடத்திலும் தெரிவித்ததாக கூறிய பரூல் நதீம் இஸ்லாமியர் என்பதால்தான் தன்னுடைய கணவர் திட்டமிட்டு அவரை இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு
அவருடைய மனைவியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த தியாகி “இந்தியாவில் எந்த வீட்டில்தான் குடும்ப வன்முறை நிகழவில்லை” என்று பதில் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள பிரச்சனைக்கு இஸ்லாமியருக்கு என்ன வேலை என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து பேசிய நதீம் “இஸ்லாமியன் என்பதால் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறேன்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.