உத்திரபிரதேச அரசு அனுமதியின்றி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பேசியதற்காக குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கானுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர் கஃபீல் கான் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 196 (ஏ) கீழ் மாநில மற்றும் ஒன்றி அரசு பதிந்த குற்றப்பத்திரிக்கை மற்றும் விசாரணை உத்தரவிற்கு மாவட்ட நீதிபதியின் ஒப்புதல் பெறவில்லை எனக் கூறி ஒற்றை நீதிபதி கவுதம் சவுத்ரி அடங்கிய அமர்வு அவற்றை ரத்து செய்தது.
இருப்பினும் ஒன்றிய மற்றும் மாநில அரசால் கட்டாய ஒப்புதல் வழங்கப்பட்டால் குற்றப்பத்திரிக்கை மற்றும் விசாரணை நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்படலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது கஃபீல் கான் அத்திரமூட்டும் வகையில் பேசியதாக கூறப்படும் வழக்கில், கஃபீல் கானிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை மற்றும் விசாரணை உத்தரவை அலிகார் தலைமை குற்றவியல் நீதிபதி பிறப்பித்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து கஃபீல் கான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (ஏ) (பல்வேறு குழுக்களிடயே பகைமையை ஊக்குவித்தல்), 153 பி (தேசிய ஒருங்கிணப்புக்கு முரணான வலியுறுத்தல்கள்), 505 (2) (வகுப்புகளுக்கு இடையே பகைமை, வெறுப்பு அல்லது தவறான விருப்பதை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல்) மற்றும் 109 (குற்றத்தைத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கஃபீல் கான் மீது மார்ச் 16, 2020 ஆம் தேதி அலிகார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஜூலை 28, 2020 ஆம் தேதி அலிகார் தலைமை குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு ஏற்றார். அதனை எதிர்த்து கஃபீல் கான் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் கஃபீல் கான், ”இது இந்திய மக்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி மற்றும் நீதித்துறை மீதான நமது நம்பிக்கையை மீட்டெடுக்கிறது” என அவர் கூறியுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், உத்திரபிரதேச மக்களுக்கு யோகி ஆதித்யநாத் அரசின் எதேச்சதிகார போக்கு முற்றிலும் அம்பலப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”இந்தத் துணிச்சலான தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிறைகளில் வாடும் ஜனநாயக ஆதரவு குடிமக்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய ஜனநாயகம் வாழ்க” என குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.