Aran Sei

சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் – இருவர் கைதுக்கு இடைக்கால தடை

Image Credits: Amar Ujala

பிரயாகராஜில், இந்த ஆண்டு தொடக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, இவர்களின் கைதுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக ‘தி இந்து’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு, பச்சூ லால் மற்றும் சுபாஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இருவரின் கைதுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள். அவர்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) ரத்து செய்ய மறுத்துள்ளனர்.

மார்ச் 6-ம் தேதி, கரோலீ காவல் நிலையத்தில், இஸ்லாமிய மதகுருவான அஹ்மத் அலி மற்றும் ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவரான சுஹைப்-உர்-ரஹ்மான் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் (ஐபிசி) 124 ஏ மற்றும் 153 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் பிரயாகராஜில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அஹ்மத் அலி மற்றும் சுஹைப்-உர்-ரஹ்மான் மீது சட்டவிரோத துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

எஃப்ஐஆரில் இருவரின் பெயரும் இல்லை என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுஹைப்-உர்-ரஹ்மானின் பெயரை, கரேலி காவல்துறை அதிகாரி சந்தோஷ்குமார் துபே, இரண்டாவது அறிக்கையில் பதிவிட்டுள்ளார் என்று ‘தி இந்து’ கூறியுள்ளது. உடன் குற்றம் சாட்டப்பட்ட ஃபசல் கான் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களின் பெயர்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றத்துடன் இருவருக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று இவர்களின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். இவர்களை துன்புறுத்துவதற்காகவே இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எஃப்ஐஆரை ரத்து செய்வதற்கான கோரிக்கையை எதிர்த்த அரசு வழக்கறிஞர், இருவரும் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கும் வரை அவர்கள் குற்றவாளிகள் தான் என்று வாதிட்டுள்ளார்.

இந்த வழக்கில், காவல்துறை தங்களது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை இருவரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்