போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தனது இறுதி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப் போவதாக, செயல்பாட்டாளர் அன்னா ஹசாரே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே தெரிவிப்பது இது இரண்டாவது முறையாகும்.
நேற்று (14.01.21) செய்தியாளர்களை சந்தித்த அன்னா ஹசாரே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்கள், ஜனநாயக விரோமானது என்றும், சட்டங்களை இயற்றும்போது மக்களின் பங்களிப்பு அவசியம் என்றும் கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
‘இதுவே எனது இறுதி போராட்டமாக இருக்கும்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே
83 வயதான அன்னா ஹசாரே, டெல்லியில் இந்த மாத இறுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளதாக கூறியதாகவும், ஆனால் எந்த தேதியில் போராட்டத்தை தொடங்குவார் என்பதை அவர் கூறவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள, ராலேகான் சித்தி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, ஜனவரி மாதத்திற்குள் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படவில்லையென்றால், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
அப்போது பேசிய அவர் “அரசு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறது, இதன் காரணமாக எனக்கு அரசின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. எனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பார்ப்போம். அவர்கள் ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே ஜனவரி இறுதி வரை அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன். எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இதுவே எனது இறுதி போராட்டமாக இருக்கும்” என்று கூறினார்.
‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு
முன்னதாக, டிசம்பர் 14-ம் தேதி, அன்னா ஹசாரே மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், வேளாண் பொருட்களின் விலையை நிர்ணயிக்க விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்றும் எச்சரித்திருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.