Aran Sei

‘நீட்’ அனிதா குறித்த அமைச்சரின் காணொளி : வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய புகாரளித்த அனிதாவின் அண்ணன்

 மேல்நிலை வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக்கல்வியில்  சேரமுடியாததால்  தற்கொலை செய்துக்கொண்ட அனிதாவின் காணொளியைப் பயன்படுத்திய அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனிதாவின் சகோதரர் மணிரத்னம், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 4) காலை, நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் காணொளியைப் பயன்படுத்தி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புதிய காணொளி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அக்காணொளியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தும், நீட் தேர்வை திமுக கொண்டுவந்தது மட்டுமின்றி, நீட் தேர்வால் உயிரிழந்த 17 பேரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அனிதா பேசுவதுபோல தயாரிக்கப்பட்டுள்ளது.

‘பிணமுண்டு வாழும் புழுவைவிட கீழானவர் நீங்கள்’- அதிமுக அமைச்சரின் காணொளிக்கு கண்டனம் தெரிவித்த ’நீட்’ அனிதாவின் அண்ணன்

மேலும், அதிமுகவையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிப்பது போலவும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனிதாவின் அண்ணன் மணிரத்னம் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், “எனது தங்கை அனிதா 12 ஆம் வகுப்பில் 1,176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை. மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கெனவே, நீட் தேர்வுக்கு எதிராக அனிதா போராட்டங்களில் ஈடுபட்டதையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என வலியுறுத்தியதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிவர்.” என்று நினைவூட்டியுள்ளார்.

“இந்நிலையில், அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கே.பாண்டியராஜன், இறந்துபோன என் தங்கை பேசுவதாகச் சித்தரித்து, ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தகவல் தொழிற்நுட்பச் சட்டம் 2000-ன் படி குற்றமாகும். அவர் வெளியிட்ட அந்த வீடியோ அனிதாவின் போராட்டத்தையும், இறப்பையும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. இது அவர் சார்ந்த கட்சியின் வெற்றி வாய்ப்புக்காக, எங்கள் குடும்பத்தினரின் சம்மதம் இன்றி, அனிதா படம் மற்றும் வீடியோவைப் பயன்படுத்தி உள்ளனர். இது குற்றமாகும்.” என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

`நீட் மற்றும் 7.5 % இட ஒதுக்கீட்டில் அடிமை அரசின் நாடகங்கள்’ – விளக்கும் ஸ்டாலின்

மேலும், வாக்காளர்களை ஏமாற்றும் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள பாண்டியராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அந்தக் காணொளியை மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்