Aran Sei

மரணமாவது எங்களுக்கு நிம்மதியைத் தரட்டும் – காவல்துறையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பம்

credits : the news minute

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்னூல் மாவட்டம் நந்தியால் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காவல்துறையின் சித்திரவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தி நியுஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்துல் சலாம் மற்றும் அவரது மனைவி நூர்ஜஹான், குழந்தைகளான சல்மா, தாதா கலந்தர் ஆகிய நான்கு பேரும் ஓடும் ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவருடைய மனைவி தனியார் பள்ளி ஆசிரியர் எனவும் ,பெண் குழந்தை சல்மா 10-ம் வகுப்பும் ஆண் குழந்தை தாதா கலந்தர் 4-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அப்துல் சலாம் நந்தியாலில் இருக்கும் நகைக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்தக் கடையில் நடந்த திருட்டு ஒன்றில், அப்துல் சலாமிற்குத் தொடர்பு உள்ளதாகக் கடை முதலாளியால் குற்றம் சாட்டப்பட்டு அப்துல் சலாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும்பொழுது காவல்துறை அவரைக் கடுமையாகத் தாக்கியதாக சலாமின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கிலிருந்து பிணையில் வந்த சலாம் குடும்பத்தை நடத்த, வாடகை ஆட்டோ ஒன்றை ஓட்டிப் பிழைத்துள்ளார். ஆனால் காவல்துறையினரும் கடை முதலாளியும் அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

அவரது வாடகை ஆட்டோவில் பயணம் செய்த ஒருவரின் பை திருடு போயுள்ளது. அதை சலாம் மற்றும் அவரது கூட்டாளிகள்தான் திருடியிருக்கக்கூடும் எனக் காவல்துறை அவர் மீது பழி சுமத்தி தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.

அப்துல் சலாம் பிணையில் விடுதலையானதால் மாதம் ஒருமுறை காவல்நிலையம் சென்று கையொப்பமிடும் அவரைக் காவல்துறை மிகவும் தவறான முறையில் நடத்தியுள்ளது.

காவல்துறையினர் சலாமின் மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும் அவருடைய வீட்டில் இருந்த அவரின் மனைவியின் நகைகளைத் திருட்டு நகை என்று பறிமுதல் செய்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காவல் துறையின் தொடர் அழுத்தங்களால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சலாம்.

இந்நிலையில் அப்துல் சலாம் காவல்துறையின் தொந்தரவுகளால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அதற்கு முன் தன்னுடைய மரண வாக்குமூலமாக ஒரு காணொலியைப் பதிவு செய்துள்ளார். அந்தக் காணொலியில் “ நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நகைக் கடை மற்றும் ஆட்டோவில் நடந்த திருட்டிற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. மரணமாவது எங்களுக்கு நிம்மதியைத் தரும் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அப்துல் சலாமைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த வட்ட ஆய்வாளர் (circle inspector) மற்றும் தலைமைக் காவலர் (head constable) இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323 (தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்தியதற்கான தண்டனை), 324 (பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வழிகளால் தன்னிச்சையாகக் காயம் ஏற்படுத்துவது), 306 (தற்கொலைக்குத் தூண்டுவது), 34 (பல நபர்கள் ஒரு குற்றச்செயலைக் கூட்டுநோக்கத்தோடு செய்வது) எனும் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிஜிபி கவுதம் சவாங் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஆந்திராவின் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு “ இஸ்லாமியர் என்பதாலேயே போடப்படும் பொய் வழக்குகளையும், அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், அப்துல் சலாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் மரணம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது” எனக் கூறியுள்ளார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இவரின் மரணத்திற்குத் தார்மிகப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

காவல் துறையின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தின் உறவினர் ஒருவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது ஆந்திரா அரசு.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய ஆந்திர உள்துறை அமைச்சர் சுசித்ரா, “முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த விவகாரம் புறக்கணிக்கப்படாது, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

டிஜிபி சவாங், ”எந்தவொரு வழக்கிலும் பொதுமக்கள் பொய்யாகக் குற்றம் சுமத்தப்படுவதாக உணர்ந்தால் அல்லது விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தப்பட்டால் மக்கள் புகார் செய்வதற்கு உதவியாக மாவட்ட அளவில் ஒரு பிரத்தியேகக் கட்டணமில்லா எண்ணை (toll free) அமைக்க உள்ளதாக” தெரிவித்துள்ளார். மக்களிடம் தவறாக நடந்துகொள்ளும் காவல்துறை ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்படும் என எச்சரித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்