Aran Sei

தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்: ‘இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதியுங்கள்’- அன்புமணி

மிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தொடர் தாக்குதல் கவலை அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று(டிசம்பர் 5), அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், பாட்டில்களையும் வீசித் தாக்கியுள்ளனர். சிங்களப் படையினரின் தாக்குதலால் தமிழக மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

“இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. இதற்கு காரணமான சிங்களப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “காரைக்கால் முதல் இராமேஸ்வரம் வரையிலான கடல் பரப்பு குறுகியது. அங்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்