2020 ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவரத்தின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு தேசிய கீதத்தைப் பாட வைத்ததாகக் கூறப்படும் 23 வயதான பைசனின் மரணத்திற்குக் காரணமான நபர்களை அடையாளம் காண காவல்துறை தாமதித்து வருகிறது. இந்த சம்பவத்தை காணொளி எடுத்த தலைமை கான்ஸ்டபிளை அடையாளம் கண்டுள்ளதாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். “2 வருடங்கள் ஆகிறது, உங்களால் இப்போதுதான் சிலரையே அடையாளம் காண முடிந்ததா?” என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த சம்பவத்தை காணொளியாக எடுத்ததாகக் கூறப்படும் தலைமை கான்ஸ்டபிள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்த வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை என பைசனின் 60 வயது தாயார் புலம்பியுள்ளார். கிஸ்மாதுன் என்ற அந்த விதவை பெண் , தனது மகனின் மரணம் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
“காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்க முயல்கிறது,” என்று கூறிய அவரது தாயார் “எது நடந்தாலும்” நான் இறக்கும் வரை இந்த வழக்கிற்காகப் போராடுவேன் என்று கூறியுள்ளார்.
காசிபூர் சிக்கன் மண்டியில் கசாப்புக் கடைக்காரராகப் பணிபுரிந்து வந்த பைசன், கர்தம்புரியில் உள்ள 66 அடி சாலையில் 6 காவலர்களால் துன்புறுத்தப்பட்டு 2020 பிப்ரவரி 24 அன்று தேசிய கீதம் பாட வைக்கப்பட்டார்.
பிறகு பைசான் ஜோதி நகர் காவல் நிலையத்தில் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படவில்லை. இறுதியில் அவர் காயமடைந்த நிலையில் அடுத்த நாள் விடுவிக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து அவர் பிப்ரவரி 26 அன்று இறந்தார் என்று அவரது தாயாரின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“காவலர்களை நீதிபதிகள் திட்டுகிறார்கள் என்று வழக்கறிஞர்கள் என்னிடம் தொடர்ந்து தெரிவிக்கிறார்கள். அதைக் கேட்டு நான் நிம்மதியாக உணர்கிறேன், ஏனெனில் அவர்கள்தான் என் மகனைக் கொடூரமாகத் தாக்கினார்கள். அவர்கள் இந்நேரம் சில அதிகாரிகளை அடையாளம் கண்டு கைது செய்திருக்க வேண்டும் என்று தி இந்துவிடம் அவரது தாயார் பேசியுள்ளார்.
“2 வருடங்கள் கடந்தும் வழக்கு நீடிப்பது எனக்கு தினமும் வலிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ”என்று தனது பையில் வைத்திருந்த பைசனின் புகைப்படத்தைக் காட்டினார். “வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, அவர்கள் மட்டுமே காவல்துறையினரின் தவறுகளை விசாரிக்க முடியும்.” என்று அந்த தாயார் பேசியுள்ளார்.
ஜோதி நகர் காவல் நிலையத்தில் உள்ள கேமராக்கள் 2020 பிப்ரவரி 25 முதல் மார்ச் 4 வரை “தொழில்நுட்ப காரணங்களால்” இயங்கவில்லை. பைசனும் மற்ற நான்கு பேரும் “அவர்கள் விருப்ப படிதான் படி காவல் நிலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் காவல்துறை முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.