Aran Sei

பீகாரில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்குப் பணம் தர மறுத்த வங்கி ஊழியர் – காணொளி வெளியானதால் மன்னிப்பு கோரினார்

பீகாரின் பேகுசராய் மாவட்டத்தின் மன்சூர் சாக் கிளையில் உள்ள யூகோ வங்கி ஊழியர் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு பணம் தர மறுத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து அந்த வங்கி ஊழியர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிப்பிரவரி 21 அன்று ஊடகவியலாளர் மீர் பைசல் ட்விட்டரில் அந்த காணொளியைப் பகிர்ந்துள்ளார், அதில் வங்கி காசாளர் உட்பட மற்ற ஊழியர்களும் ஹிஜாப் அணிந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். காணொளியில் ஹிஜாப் அணிந்த பெண் தெரியவில்லை என்றாலும், ஹிஜாப் அணிந்ததற்காக பணத்தை மறுத்த ஊழியர்கள் மீது கோவமாகப் பேசும் அந்த பெண்ணின் குரல் தெளிவாகக் கேட்கிறது.

இந்த சம்பவம் பிப்பிரவரி 10 அன்று மதீன் ஆலமின் அவர்களின் மகள் யூகோ வங்கியின் மன்சூர் சாக் கிளைக்கு பணம் எடுக்கச் சென்றிருந்தார். அங்கு ஹிஜாபைக் கழற்றினாள் தான் பணம் தரப்படும் என்று வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். எப்போதுமே இந்த வங்கிக்கு ஹிஜாப் அணிந்து தான் வருவதாகவும், ஆனால் இதுவரை யாரும் என் ஹிஜாபை கழற்றுமாறு கூறியதில்லை எனவும் அதனால் நான் என் ஹிஜாபை கழற்ற மாட்டேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார். இதை கேட்ட வங்கியின் காசாளர் ஹிஜாபை கழற்றவில்லை என்றால், பணம் தரமாட்டேன் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

“அதன் பிறகு நாங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அந்த காணொளியை வேறு யாரோ ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால், பிப்ரவரி 21 ஆம் தேதி யூகோ வங்கி மேலாளர் எங்களைத் தொடர்பு கொண்டு பணம் தர மறுத்த ஊழியர் உங்களிடம் மன்னிப்புக் கேட்டதாக அந்த பெண்ணின் தந்தை மதீன் ஆலமின் கூறியுள்ளார்.

பிப்பிரவரி 20 அன்று ட்விட்டரில் வெளியான இந்த காணொளியைத் தொடர்ந்து யூகோ வங்கி அதற்கு பதிலளித்தது. அதில்,“எங்கள் வங்கி குடிமக்களின் மத உணர்வுகளை மதிக்கிறது மற்றும் எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களைச் சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட மாட்டோம், ஆகவே இந்த பிரச்சினையில் உண்மைகளைச் சரிபார்த்து வருவதாக யூகோ வங்கி கூறியுள்ளது.

இதற்கு அடுத்த நாளான பிப்பிரவரி 21 அன்று அந்த யூகோ வங்கியின் மேலாளர் அந்த பெண்ணின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அங்கிருந்த நைந்து ஊழியர்களின் சார்பாக அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

“வங்கி ஊழியர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் இங்கு வந்தால், இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கலாம் என்று நினைத்தது நாங்களே அந்த வங்கியின் கிளைக்குச் சென்றோம். பணம் தர மறுத்த வாங்கி ஊழியர் எங்களிடம் மன்னிப்பு கேட்டார் என்று அந்த பெண்ணின் தந்தை மதீன் ஆலமின் தி வயர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

அந்த வங்கி ஊழியரைப் பணி இடைநீக்கம் செய்வதாக வங்கி உத்தரவிட்ட போதிலும், அவரை மனிதாபிமான அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்ய வேண்டாம் என வங்கி மேலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பீகார் மாநில சிறுபான்மை ஆணையம் யூகோ வங்கிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், ஹிஜாப் அணிந்து வங்கிக்கு வரும் பெண்களுக்குப் பணத்தை மறுக்கக் கூடாது என்று அதன் அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்