Aran Sei

இரண்டாவது முறையாக கொல்கத்தா செல்லும் உள்துறை அமைச்சர் – இம்முறை விவசாயி வீட்டில் லன்ச்

2021-ம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களுக்கு பா.ஜ.கவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளார்.

முன்னதாக, நவம்பர் 5 ம் தேதி, மேற்கு வங்கத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புரட்சியாளர் பிர்சா முண்டா என்று கூறி வேறு சிலைக்கு மாலை அணிவித்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்ச்’ – மேற்கு வங்கத்தில் அமித் ஷா புது வியூகம்

கடந்த முறை, மாதுவா பழங்குடிப் பிரிவைச் சேர்ந்த ஒருவரின் இல்லத்தில் அவர்களின் குடும்பத்துடன் அமித் ஷா மதிய உணவு சாப்பிட்டார். இந்த முறை பலிஜூரி கிராமத்தில் இருக்கும் விவசாயியான சனாதன் சிங் இல்லத்தில் மதிய உணவை சாப்பிடவுள்ளார். உள்துறை அமைச்சரின் வருகையினால் அவருடைய இல்லம் பெயிண்ட் அடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு தயாராகி இருக்கிறது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

credits : india today
credits : india today

இந்நிலையில் அவருடைய வருகைக்கு ஒரு நாள் முன்பே மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் புகைபடத்துக்கு மேலே அமித் ஷா இருப்பது போன்ற படங்கள் அடங்கிய பதாகைகள் மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூர், சாந்திநிகேதன் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இது அந்தப் பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

credits : telegraph
credits : telegraph

ரவீந்திரநாத் தாகூரால் வங்கத்தில் அமைக்கப்பட்ட தேசிய பல்கலைக்கழகமான விஷ்வ பாரதி பல்கலை கழகத்தின் மாணவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதையடுத்து விஷ்வ பாரதியின் மாணவர்களாலும் உள்ளூர் மக்களாலும் அந்த பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

பழங்குடியினர் வீட்டில் `லஞ்சு’ – ‘அமித் ஷா அரங்கேற்றிய நாடகம்’ – மம்தா பானர்ஜி

பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் சுற்றுப்பயணத்தின் போது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வரும் சூழலில், உள்துறை அமைச்சர் மேற்கு வங்கம் வந்துள்ளார்.

மேற்கு வங்கத்துக்கு வருகை தந்துள்ளது குறித்து, அமித் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்திருக்கிறேன் எனவும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலமாக சகோதர சகோதரிகளுடன் உரையாட காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இன்று அவர் மிட்னாபூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார். இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதுடன், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ள சுவேண்டு அதிகாரி, உட்பட சில திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், அமித் ஷா தலைமையில் பாஜகவில் இணைய இருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் களமிறக்கப்பட்டிருக்கும் அமித் மால்வியா

மேற்கு வங்க பாஜகவின் மாநில தலைவர் திலிப் கோஷ், மாநில சட்டமன்ற தேர்தல் முடியும் வரை (மே மாதம்) ஒவ்வொரு மாதமும் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மேற்கு வங்கத்திற்கு வருகை தர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்