தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான சந்திப்பு குறித்து கேட்டதற்கு, எல்லாவற்றையும் பொதுவெளியில் பகிர வேண்டியதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் இல்லத்தில், அமித் ஷாவும் சரத் சவாரும் சந்தித்து பேசிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படியான ஒரு சந்திப்பு எதுவும் நடக்கவில்லை என்று அத்தொழிலதிபரின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்ட்ர மாநில அமைச்சர் நவாப் மாலிக், இத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை என்று மறுத்ததுடன், சில பத்திரிக்கையாளர்களைக் கொண்டு இத்தகைய கேள்விகளை வேண்டுமென்று கேட்க வைக்கிறார்கள் என்றும், இது போன்ற வதந்திகளை மக்களிடையே பரப்புவதன் வழியாக குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் ஆட்சி அமைத்துள்ளன. சிவசேனா கட்சியின் உத்தவர் தாக்கரே முதலமைச்சராக உள்ளார். பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.
பிப்ரவரி 25 ஆம் தேதி, மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் வெடிபொருளான ஜெலட்டின்களால் நிரப்பப்பட்ட கார் கண்டெடுக்கப்பட்டது. இதைத் திட்டமிட்டு நடத்தியதாக மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும், மகாராஷ்டிராவின் ஆளும் அரசான மகா விகாஸ் அகாதி மீது பாஜக கடும் விமர்சனங்களை வைத்தது.
இதற்கிடையில், மார்ச் 5 அன்று, அந்த காரை கடைசியாக பயன்படுத்திய மன்சுக் ஹிரான் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
முகேஷ் அம்பானியின் வீடு “ஆன்டிலியா” அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் : குற்றப்பிரிவு விசாரணை
சில நாட்களுக்கு முன்பு, சச்சின் வாஸின் உயரதிகாரியும் மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையருமான பரம் பிர் சிங், மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தம்மிடம் உணவகங்களிலும் கேளிக்கை விடுதிகளில் இருந்து மாதந்தோறும் 100 கோடி வசூலித்துத் தர வேண்டும் என்று வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
சரத்பவார் உடனான சந்திப்புக் குறித்து அமித் ஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ‘எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த வேண்டியதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.