Aran Sei

” இலங்கையிலும் நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் ” – திரிபுரா முதல்வர் பேச்சு

பாஜகவின் பிப்லாப் குமார் தேப் - Image Credit : thewire.in

பாஜக, இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளத்திலும், இலங்கையும் அரசு அமைக்கும் இலக்குடன் இருப்பதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் கூறியுள்ளார்.

அகர்தலாவின் ரபீந்திரா ஷதாபர்ஷிகி பவனில், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்றில் அவர் சனிக்கிழமை பேசியுள்ளார்.

இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் வென்ற பிறகு, அண்டை நாடுகளிலும் கட்சியை அமைத்து, அந்நாடுகளிலும் அரசாங்கம் அமைக்க பாஜக விரும்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

“அரசு விருந்தினர் மாளிகையில் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, ‘இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக அரசாங்கங்களை அமைத்து விட்டது’ என்று கூறினார். அதற்கு பதிலாக, ‘இலங்கையும் நேபாளமும்தான் மிச்சம்’ என்று அமித் ஷா கூறினார். நாம் இலங்கையிலும் நேபாளத்திலும் கட்சியை விரிவுபடுத்தி அங்கு அரசாங்கம் அமைக்க வேண்டும்” என்று பிப்லாப் குமார் தேப் கூறியுள்ளதாக ஈஸ்ட் மோஜோ செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

அமித் ஷாவின் தலைமையை பாராட்டிய பிப்லாப் குமார் தேப், கம்யூனிஸ்டுகளின் சாதனையை முறியடித்து, பாஜகவை உலக அளவில் பெரிய கட்சி என்ற சாதனை அமித் ஷா தலைமையில் சாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கேரளாவில், கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் மாறி மாறி அதிகாரத்துக்கு வருவதற்கு முடிவுகட்டி, பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும் வகையில் கட்சி செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்கள் விடை கொடுப்பார்கள் என்றும், தமிழகம் உட்பட நாடு முழுவதும் “தாமரை மலரும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.

திரிபுரா முதல்வர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது இந்தியாவின் அண்டை நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்று திரிபுராவின் எதிர்க்கட்சியான சிபிஐ(எம்) தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆன ஜிதேந்திர சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

பிப்லாக் குமார் தேபின் பேச்சை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைமை பதில் அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது என்று திரிபுரா காங்கிரஸ் கிளை துணைத் தலைவர் தபஸ் தே கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்