Aran Sei

டெல்லிக் கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் – உண்மையறியும் குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள உண்மை அறியும் குழு அறிக்கையில், வட கிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்திற்கு அமித் ஷாதான் காரணம் என்று தெரிவித்துள்ளதாக தி வயர் இணைதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில், பிப்ரவரி மாதம் வட கிழக்கு டெல்லியில் கலவரம் உருவானது. இந்தக் கலவரத்தில் சிறுபான்மையின மக்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களின் வீடுகள் சேதம் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் 40 இஸ்லாமியர்களும், 13 இந்துக்களும்   உயிரிழந்தார்கள்.

இந்தக் கலவரங்களும் வன்முறையும் தீவிரமானதற்கு அமித் ஷாதான் காரணம் என “வட கிழக்கு டெல்லியில் இனவாத வன்முறை, பிப்ரவரி 2020” எனப் பெயரிடப்பட்டிருக்கும் சிபிஐ (எம்) அறிக்கை தெரிவித்துள்ளது.

பாஜக தலைவர்கள் “துரோகிகளை சுட்டுக் கொல்ல வேண்டும், சிறுபான்மையின மக்கள் இந்துக்களின் வீடுகளில் புகுந்து பாலியல் வன்கொடுமையும், கொலையும் செய்வார்கள்” என உரையாற்றியதை உள்துறை அமைச்சர் கண்டுகொள்ளவோ, கண்டிக்கவோ இல்லை என்கிறது அறிக்கை.

“24 பிப்ரவரி முதல் 27 பிப்ரவரி வரை கலவரம் நடந்த போது, 26 லட்சம் மக்கள் இருக்கும் ஒரு பிரதேசத்தில் 1,393 -ல் இருந்து 4,756 காவல்படையினரே கலவரத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்டனர். பிப்ரவரி 24 அன்று வன்முறை வெடித்த போது, ஏன் ஊரடங்கு அமல் செய்யப்படவில்லை? ஏன் இராணுவம் அனுப்பப்படவில்லை? டெல்லிக் காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் கூட குறைவான எண்ணிக்கையில் , தாமதமாக அனுப்பப்பட என்ன காரணம்? ” எனக் கேள்விகள் எழுப்புகிறது சிபிஐ(எம்)-இன் அறிக்கை.

“எந்த விசாரணையும் நடத்தப்படுவதற்கு முன்னர், உள்துறை அமைச்சகம் கண்டுபிடித்த விவரங்களை அமித் ஷா மக்களவையில் முன்வைத்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர்கள் டிசம்பர் 14, 2019 அன்று மக்களை சாலைகளில் இறங்கிப் போராடச் சொன்னார்கள் என எதிர்க்கட்சி மீது பழி போட்ட அமித் ஷா, சிறுபான்மையின மக்கள்தான் வன்முறைக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டவும் செய்தார்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்பாட்டாளர்களும் போராட்டம் செய்துகொண்டிருந்தவர்களும் சதி திட்டம் தீட்டியதுதான் கலவரங்களுக்குக் காரணம் என்று சொல்லி, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய பலரைக் கைது செய்தது டெல்லி காவல்துறை.

பிப்ரவரி 21 அன்று பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாக்கூர் சிவராத்திரி கூட்டங்களில் மதவாதத்தைத் தூண்டும் விதமாக உரையாற்றியதுதான் டெல்லிக் கலவரங்களுக்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிடும் அறிக்கை, பாதிக்கப்பட்டோருக்கு ஆம் ஆத்மி அரசு நிவாரணம் அளித்த முறையையும் விமர்சித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனும் கோரிக்கையையும் சிபிஐ(எம்)-ன் அறிக்கை முன்வைத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்