டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவரும், அம்மாநில அகில இந்தியா மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் நேஹா, இணையவழியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அம்மாநில முதலமைச்சரை விமர்சித்ததற்காக அப்பல்கலைக்கழக நிர்வாகம் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 23 2020 அன்று, அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழாவின் போது கொண்டுவரப்பட்ட கொள்கைகள் குறித்து ,நேஹா “இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான கட்டணங்கள்” என்ற தலைப்பில் இணையவழியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் போராட்டத்தின் போது 9 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை குறிப்பிட்டு , “முதலமைச்சர் மாணவர்களைக் கண்டுகொள்வதில்லை” என்று குறிப்பிட்டதாகவும், மேலும், பல்கலைக்கழகத்தில் ஒடுக்கப்பட்ட,பழங்குடியின மாணவர்கள் மீது சாதிப்பாகுபாடுகள் நிலவுகிறது என்று யூடூப் வழி நிகழ்வின் போது குறிப்பிட்டதாகவும்
பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தி வயர் கூறுகிறது.
இந்நிலையில், நேஹா இறுதித் தேர்வு எழுத வேண்டுமானால் 5000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள , அகில இந்தியா மாணவர் சங்கத்தினர், இந்த தண்டனையை பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் , டெல்லி அரசாங்கம் தலையிட்டு ஜனநாயகக்குரல் எழுப்பும் மாணவர்களின் மீது பல்கலைக்கழகத்தின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.