அமெரிக்காவில், அமேசான் நிறுவனத்தின் அலபாமா தொழிற்கிடங்கின் ஊழியர்கள் தொழிற் சங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அலபாமாவின் பெசெமெர் தொழிற்கிடங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், அமேசானில் வேலை செய்யும் 1500 முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களின் தேவைகளை முன்னிறுத்த தொழிலாளர் சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென அமெரிக்காவின் தேசிய தொழிலாளர் நல வாரியத்தில் மனு சமர்ப்பித்திருக்கிறார்கள்.
தொழிலாளர்கள், சங்கங்கம் அமைப்பதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் அமேசான் நிறுவனத்திற்கு எதிரான பெரிய போராட்டமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்லறை, மொத்த வர்த்தகம் மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சங்கம் அமைக்கப்பட வேண்டுமென ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பான விசாரணை டிசம்பர் 18 அன்று நடத்தப்படும் என தேசிய தொழிலாளர் நல வாரியத்தின் செய்தி தொடர்பாளர் கெவின் பெட்ரோசியோன் தெரிவித்திருக்கிறார் என அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமேசானில் வேலை செய்யும் ஊழியர்கள் அந்த நிர்வாகத்தால் மோசமாக நடத்தப்படும் செய்தி புதிதல்ல. குறைவான சம்பளம், முறையான குறைகேட்பு அமைப்பு இல்லாதது, கடுமையான வேலை சூழல்கள், பாதுகாப்பு வசதிகள் இன்மை, நீண்ட வேலை நேரம் என அமேசான் ஊழியர்களின் நிலை குறித்து, சங்கத்துக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“கடுமையான பணிச் சூழலினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் காயங்களை சுமந்து வாழ்கிறோம்” என்று அந்த தளத்தில் தொழிலாளர்களால் எழுதப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அமேசான், மார்ச் மாதம் பெசெமெர் தொழிற்கிடங்கு தொடங்கப்பட்டதில் இருந்து அங்கே ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது; முழு சுகாதாரம், கண் மற்றும் பல் மருத்துவ காப்பீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 15.30 டாலர் கொடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
“எங்கள் ஊழியர்கள் தொழிலாளர்கள் சங்கத்தில் இணைய விரும்புவது அவர்களுடைய உரிமை. ஆனால், இது பெரும்பான்மை ஊழியர்களின் கருத்தல்ல என்பது எங்களுக்கு தெரியும்” என அமேசானின் செய்தி தொடர்பாளர் ஹெதர் நாக்ஸ் தெரிவித்துள்ளார் என அசோசியேட் பிரஸ் கூறியுள்ளது.
“தொழிலாளர் சங்கத்திற்கு எதிராக இருக்கும் அலபாமாவில், அமேசான் ஊழியர்கள் ஒரு சங்கம் அமைத்தார்கள் என்றால், அமெரிக்காவின் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அது நன்மையளிப்பதாக இருக்கும்” என ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.