Aran Sei

“அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லிக்கு வாருங்கள்” – விவசாயச் சங்கங்கள் அழைப்பு

மத்திய அரசின் புது விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் போது, அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லிக்கு வாருங்கள் எனப் போராடிக்கொண்டிருக்கும் விவசாயச் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

புது விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என நாடு முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்ட வரைவு ஒன்றை வடிவமைத்து இன்று விவசாயிகளுக்குக் கொடுத்துள்ளது. இந்தத் திட்ட வரைவில், குறைந்தபட்ச ஆதார விலைக்குப் புதிய விவசாயச் சட்டங்களினால் எந்தப் பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். புதிய சட்டங்கள் விவசாயத்துறையைத் தனியார்மயமாக்கி, விவசாயிகளின் வருவாயை அழிக்கிறது; குறைந்தபட்ச ஆதார விலையை ரத்து செய்யும் நோக்கில் இயற்றப்பட்டதாக இருக்கிறது என்பதுவே போராட்டங்களுக்குக் காரணம்.போராட்டம் தொடங்கிய பிறகு அரசுக்கும் விவசாயத் தலைவர்களுக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், எந்தப் பேச்சுவார்த்தையுமே வெற்றிகரமாக முடியவில்லை.

இந்நிலையில், இன்று, எழுத்தில் வாக்குறுதி அளிப்பதற்காக, திட்ட வரைவு ஒன்றை மத்திய அரசு விவசாயிகளுக்குக் கொடுத்தது. இதில், குறைந்தபட்ச ஆதார விலை முறை தொடர்ந்து நீடிக்கும், அரசு மண்டிகள் மற்றும் தனியார் மண்டிகளுக்கு இடையேயான பாகுபாடு குறித்து விவசாயிகள் புகார்கள் எழுப்பியிருப்பதனால் – அது தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும், குறை தீர்ப்பு முறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தனியார் வர்த்தகர்களைப் பதிவு செய்தல் தொடர்பான விதிகளை இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மாற்றப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

விவசாய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் இந்தத் திட்ட வரைவை நாற்பது விவசாயத் தலைவர்களுக்கு அளித்துள்ளார். சட்டங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால் சட்ட வரைவை நிராகரிப்பதாக விவசாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Photo Credit : thehindu

மத்திய அரசின் திட்ட வரைவையும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருத்தங்களையும், மீண்டும் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் மாநில அரசுகள் ஏற்றாலும், அதனால் விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் இல்லை .

இந்நிலையில், எதிர்க்கட்சியினரான ராகுல் காந்தி ,டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி சரத் பவார் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். புது விவசாயச் சட்டங்கள், விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் ரத்து செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்ததாகச் சொல்லப்படுகிறது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்