Aran Sei

ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி – அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் கருத்து

ற்போதைய சூழலில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு இயக்க அனுமதிக்கலாம் என்றும் அனுமதி நீட்டிப்பு குறித்து பின்பு முடிவெடுக்கப்படும் என்றும் அனைத்துக கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முடிவெடுப்பதற்காக, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று (ஏப்ரல் 26) ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக, தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியிருந்த நிலையில், தமிழக அரசின் தரப்பில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் தொடர்பாக இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

முதல்வர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். திமுக சார்பில் மகளிர் அணி செயலாளர் கனிமொழி மற்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேமுதிக சார்பில் கேப்டன் மன்ற செயலாளர் அன்புராஜ், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், துணை செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் கே.டி.ராகவன், பாமக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

மதிமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில சிறிய கட்சிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்படவில்லை.

கூட்டத்தில், திமுக சார்பில் பேசிய கனிமொழி, “ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டும்,  தமிழக அரசின் கண்காணிப்புடன் அனுமதியளிக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்துராசன் பேசுகையில், “வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது கவலைக்குரியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் முயல்கிறது. இதனை அரசு அனுமதிக்கக் கூடாது.” என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமைகாக கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம்.” என்று கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில், “தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க அனுமதிக்கலாம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க நிபுணர் குழுவை ஏற்படுத்தலாம்.” என்று கூறியுள்ளார்.

‘தூத்துக்குடியில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடப்பதை விரும்பவில்லை’ : ஸ்டெர்லைட்டின் மனுவிற்கு தமிழக அரசு பதில்

அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, “ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது அரசின் நோக்கமல்ல. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு மட்டும் இயக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிக்க அனுமதியில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் 4 மாதங்களுக்காக மீண்டும் வழங்கப்படும். இப்போது இருக்கும் சூழலை கருத்தில்கொண்டு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அனுமதி நீட்டிப்பு குறித்து பின் முடிவெடுக்கப்படும். உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜனை அளிப்பதில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஆலையை இயக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி தரக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள காணொலியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு தமிழகத்தில் வேறு எந்த வாய்ப்பும் இல்லாததுபோன்ற ஒரு பிம்பத்தை தமிழக அரசு ஏற்படுத்தியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறப்பதற்கு அனுமதியளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்