Aran Sei

சீனாவில் இஸ்லாமியர்களை அடையாளம் காண மென்பொருள் – அலிபாபா நிறுவனம் உருவாக்கியுள்ளது

Image Credits: Newssew

சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா முகத்தை அடையாளம் காணும் (face-recognition) மென்பொருளை உருவாக்கியுள்ளது. இது, உய்குர்கள் என்று அழைக்கப்படும் துருக்கிய மொழி பேசும் இஸ்லாமியர்களை அடையாளம் காண உதவும் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது, சீனாவில் இஸ்லாமிய சிறுபான்மையினர்கள் நடத்தப்படும் விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. இப்போது அலிபாபா இந்தச் சர்ச்சையில் புதிதாகச் சிக்கியுள்ளது” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

படங்கள் மற்றும் வீடியோக்களில் உய்கூர் மற்றும் பிற இன சிறுபான்மையினரின் முக அம்சங்களை கண்டறிய மென்பொருளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அலிபாபாவின் கிளவுட்-கம்ப்யூட்டிங் வணிகத்திற்கான வலைத்தளம் காட்டியது என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் குறிப்புகளை அலிபாபா அகற்றிவிட்டாலும் அமெரிக்காவில் இயங்கும் கண்காணிப்பு ஆராய்ச்சி நிறுவனமான ஐபிவிஎம் வலைப்பக்கங்களில் இது தோன்றியுள்ளது.

இது சோதனைக்காகச் செய்யப்பட்ட ஒன்று என அலிபாபா தெரிவித்துள்ளது. “எங்கள் தொழில்நுட்ப திறனை ஆராயும் போது சோதனைக்காக இந்த அம்சம் பயன்படுத்தப்பட்டது. இது சோதனைக்கு அப்பாற்பட்டு எங்கும் பயன்படுத்தப்படவில்லை” என்று அலிபாபா கூறியுள்ளது.

“சீன நிறுவனமான ஹூவேய், உய்குர் சிறுபான்மையினரின் முகங்களை அடையாளம் கண்டு காவலர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் வகையிலான ஒரு மென்பொருளைச் சோதனை செய்வதில் ஈடுபட்டுள்ளது” என்று கடந்த வாரம், ஐபிவிஎம் தெரிவித்தது.

சீனா: கட்டாய உழைப்பில் 5 லட்சம் உய்குர் இஸ்லாமியர்கள்

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உய்குர்களும் பிற இஸ்லாமிய சிறுபான்மையினரும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது போன்ற தடுப்பு முகாம்கள் இருப்பதை ஆரம்பத்தில் சீன அரசு மறுத்தது, பின்னர் இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது தொழில் பயிற்சி மையங்கள் என்றும், தீவிரவாதத்தை தடுப்பதற்கும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் அவை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியது.

சமீபத்தில் சின்ஜியாங் பகுதியில், முகத்தை அடையாளம் காணும் மென்பொருள், கருவிழி ஸ்கேனர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பங்கள் ஆகியற்றிற்கு சீன அரசு அதிக அளவு பணத்தை செலவிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்