Aran Sei

‘மக்கள் பட்டினியில் இருக்கும்போது 5 ட்ரில்லியன் டாலர் வருமானத்திற்கு கனவு காண்கிறார் மோடி’ – அகிலேஷ் யாதவ்

ருபுறம், நம் நாட்டு மக்கள் வெறும் வயிற்றில் தூங்கினாலும், மறுபுறம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலையை இந்தியா அடைய வேண்டும் என்று கனவு காண்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள் என்று உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான வெல்துங்கர்ஹில்ஃப் இந்த ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டு பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலானது கருத்துக் கணிப்பின் அடிப்படையில் மட்டும்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்ற ஒன்றிய அரசின் குற்றச்சாட்டை வெல்துங்கர்ஹில்ஃப் மறுத்துள்ளது.

2021-ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 101-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இந்தியா இருந்தது.

உலக பட்டினி குறியீட்டில் அபாய நிலையில் இந்தியா: மறுக்கும் ஒன்றிய அரசு – உலக பட்டினி குறியீட்டின் ஆலோசகர் பதிலடி

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 76-வது இடத்திலும், வங்கதேசம் 76-வது இடத்திலும், மியான்மர் 71-வது இடத்திலும், பாகிஸ்தான் 92-வது இடத்திலும் உள்ளன.

இப்பட்டியலுக்கு தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, வெல்துங்கர்ஹில்ஃப் அமைப்பு இந்த பட்டியலை தயாரிக்க அறிவியலற்ற முறையை பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தது.

இதற்குப் பதிலடிக்கொடுக்கும் வகையில் பேசியுள்ள உலக பட்டினி குறியீட்டின் ஆலோசகரான மிரியம் வைமர்ஸ், “உணவு மற்றும் வேளாண் சங்கத்தின் (ஃப்ஏஓ) தொலைபேசி வாயிலான கருத்துக்கேட்பான ‘உணவு பாதுகாப்பின்மை அனுபவம் அளவீடு’ முறையை இந்த உலக பட்டினிக் குறியீடு பட்டியலுக்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, ஊட்டச்சத்து குறைபாட்டின் குறியீட்டு அளவே இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் உணவு இருப்புநிலை குறித்த தரவை கவனத்தில் கொண்டு இந்த உலக பட்டினி குறியீடு பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

உலக பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில் 94 வது இடத்தில் இந்தியா – பதுக்கல்காரர்கள் போல செயல்படும் ஒன்றிய அரசே காரணம் என குற்றச்சாட்டு

இந்நிலையில், இதுகுறித்து, நேற்று(அக்டோபர் 17), லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள அகிலேஷ் யாதவ், “ஒருபுறம், நம் நாட்டு மக்கள் வெறும் வயிற்றில் தூங்கினாலும், மறுபுறம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலையை இந்தியா அடைய வேண்டும் என்று கனவு காண்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டு, 2024-25-க்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கனவை விமர்சித்துள்ளார்.

விவசாயிகள் பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உத்தரபிரதேச பாஜக அரசை விமர்சித்துள்ள அவர், மாநிலத்திற்கு ஒரு யோக்ய (ஆற்றல் மிகுந்த) அரசாங்கம்தான் தேவை என்றும் யோகி அரசாங்கம் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

“பாஜக அரசு நாட்டில் உள்ள குறைபாடுகளை அடைப்பதற்கு பதிலாக பாக்கெட்டுகளை நிரப்புகிறது. உலக பட்டினி குறியீட்டைப் பொறுத்தவரையில், இந்தியா பட்டினியை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு அதற்கு தேவையான முயற்சிகளைச் செய்யவில்லை. இதன் விளைவாக, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தை விட இந்தியா பின் தங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்