Aran Sei

சிறையிலிருந்து போட்டியிட்ட மனித உரிமை செயல்பாட்டாளர் அகில் கோகோய் – பாஜகவை எதிர்த்து பெரும்வெற்றி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நீக்கக் கோரி போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகில் கோகோய், தான் போட்டியிட்ட அசாம் மாநில சிப்சாகர் சட்டபேரவை தொகுதியில் பாஜக வேட்ராளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் விவசாயிகள் உரிமை செயல்பாட்டாளரான அகில் கோகோய், உபா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தபடியே வெற்றியைப் பெற்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களில் பங்கு வகித்ததற்காகக் கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி (கேஎம்எஸ்எஸ்) எனும் விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் அகில் கோகோய் மீது 13 வழக்குகள்  தேசிய புலனாய்வு முகமையால் பதிவு செய்யப்பட்டன.

“மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” – அசாம் கிறிஸ்தவ மன்றம் வேண்டுகோள்

கடந்த அக்டோபர் மாதம், விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் அகில் கோகோய்க்கு பிணை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, மொத்தம் 12 வழக்குகளில் அவருக்குப் பிணை கிடைத்தாலும், ஒரு வழக்கில் மட்டும் இன்னும் பிணை கிடைக்காததால் அவர் சிறையில் உள்ளார்.

பிணை மறுக்கப்பட்ட அந்த ஒரு வழக்கானது, முதலில் கௌஹாத்தியில் உள்ள சந்த்மாரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (உபா), அவர்மீது தேச துரோகம், குற்றச் சதி, பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

என்.ஆர்.சியில் விடுபட்டவர்களுக்கு ’நிராகரிப்பு சீட்டுகள்’– அசாம் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை

இந்நிலையில், அசாம் மாநில சட்டபேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சிப்சாகர் தொகுதியில், அவர் தொடங்கிய ரைஜோர் தள கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.

சிறையில் இருந்ததால், அவரால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடியாமல் இருந்தது. அந்நிலையில்தான், அண்டை மாவட்டமான ஜோர்ஹாட்டைச் சேர்ந்த அகில் கோகோய்யின் தாயான பிரியாடா கோகோய், சிப்சாகர் தொகுதியில் முகாமிட்டார்.

ரைஜோர் தள கட்சியின் உறுப்பினர்களும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நீக்க கோருபவர்களும் உடனிருக்க, 85 வயதான தாய், தனது மகனுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

சிஏஏ-வுக்கு எதிராக அஸ்ஸாமில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் – மாணவர்கள் மீது காவல்துறை தடியடி

அப்போது, “நான் என்னுடைய மகனுக்காக மட்டுமே பரப்புரை செய்கிறேன். என்னுடைய மகன் விடுதலையாவதை பார்க்க விரும்புகிறேன். மக்களால் மட்டுமே என்னுடைய மகனைச் சிறையிலிருந்து விடுவிக்க முடியும். இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவது, அவர் சிறை வாழ்க்கையிலிருந்து விடுதலையாவதற்கான முதல் படியாக இருக்கும்.” என்று அவரது தாய் தனது அன்மாவில் இருந்து நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைத் தெரிவித்திருந்தார்.

83 வயதில் அவருக்கு முதுமை தரும் பல நோய்கள் உள்ளன என்றாலும், ஒரு நாள் கூட அவர் பரப்புரையை தவறவிடவதில்லை என்று ரைஜோர் தளத்தின் செயல் தலைவர் பாஸ்கோ டி சைக்கியா குறிப்பிட்டிருந்தார்.

மார்ச் 20 ஆம் தேதி, சிறையில் இருந்துபடி கடிதம் ஒன்றை அகில் கோகோய் எழுதியிருந்தார். அசாமையும் அம்மாநில மக்களின் எதிர்காலத்தையும் ஜனநாயக விரோத கட்சியான பாஜகவிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு, நான் இந்தக் கடிதத்தைச் சிறையிலிருந்து எழுதி அனுப்புகிறேன் என்ற முன்வாசகத்தோட அக்கடிதத்தை எழுதியிருந்தார்.

சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிடும் சிஏஏ போராட்டக்காரர் : மகனுக்காக பரப்புரை செய்யும் 83 வயது தாய்

தான் போராடிக்கொண்டிருக்கும் அசாம் மக்களுக்கு எழுதப்பட்ட அக்கடிதத்தில், “அசாமின் எதிர்காலம் மக்களின் கைகளில் உள்ளது. அவர்களே அம்மாநிலத்தை காப்பாற்றுவதற்கான இறுதி முடிவை எடுக்க வேண்டும். அசாம் காப்பாற்றப்பட வேண்டுமானால், பாஜகவுக்கோ சிஏஏவுக்கோ ஆதரவானவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். அசாமின் வளங்களை விற்று, இம்மாநிலத்தின் எதிர்காலத்தை டெல்லியின் காலடியில் பாஜக தள்ளியுள்ளது. ஆகவே, நாம் தேர்தலில் பாஜகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். இது காலத்தின் தேவை. செய்ய வேண்டிய நம் கடமை. இது வாழ்வா சாவா போராட்டம்.” என்று தன் மக்களுக்கு அகில் கோகோய் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், “2016 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி கட்டிலில் ஏறியதிலிருந்து, இந்த ஐந்தாண்டு பதவி காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் என்னைச் சிறை வைத்துள்ளனர். இங்கு (சிறையில்) நான் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு துற்பிரளத்திற்குள் தள்ளப்பட்டு, அதனுடனேயே என் சிறை நாட்களை வென்றுக்கொண்டிருக்கிறேன். எனது எதிர்காலம் என்னவாக இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால் பாஜக ஆட்சியின் கீழ் அசாமும் அதன் மக்களின் எதிர்காலமும் இருள் சூழ்ந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.” என்று அவர் தன் கவலையை தெரிவித்திருந்தார்.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

மற்றொரு கடிதத்தில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனக்கு அரசியல் பாடங்கள் நடத்திதனர் என்று அகில் கோகோய் குறிப்பிட்டிருந்தார்.

அதில், “முதலில் எனக்கு இந்துத்துவா பற்றிக் கூறப்பட்டது. பின்னர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தால், உடனடியாக பிணை கிடைக்கும் என்று கூறப்பட்டது. இந்த வாய்ப்பை மறுத்தபோது, பாஜகவில் சேர எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. காலியாக உள்ள சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு அசாம் பாஜக அரசில் நான் அமைச்சராகலாம் என அவர்கள் தெரிவித்தனர்.” என்று அவர் கடிதத்தில் கூறியிருந்தார்.

மேலும், “நான் மறுத்ததால், என் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. எனக்கு உச்சநீதிமன்றத்தில் பிணை கிடைக்கவில்லை. இப்போது நான் அனைத்து வாய்ப்புகளையும் இழந்துவிட்டதாக தெரிகிறது. என் குடும்பம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டது. நானும் உடல் ரீதியாக அழிக்கப்படுகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

‘அகில் கோகோய்க்கு ஊபா சட்டத்தின் கீழ் தண்டனையளிக்க முடியாது’ : பிணையை உறுதி செய்த கௌஹாத்தி நீதிமன்றம்

இந்நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த மூன்று கட்ட வாக்குபதிவைத் தொடர்ந்து, நேற்று (மே 3) வாக்குகள் எண்ணப்பட்டன.

அதில், சிப்சாகர் சட்டபேரவை தொகுதியில் பாஜக வேட்ராளர் சுரபி ராஜ்கோன்வாரியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

அனைத்தையும் இழந்தாலும், இறுதியாக தனது மன பலத்தையும் மக்களின் பலத்தையும் மட்டுமே நம்பிய அந்த சிறைவாசி வெற்றிப்பெற்றுள்ளார்.

மறுபுறம், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான இருமுனைப் போட்டி அசாமில் நிலவி வந்த நிலையில், மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில், பாஜக 78 தொகுதிகளையும், காங்கிரஸ் 46 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 2 இடங்களையும் கைபற்றியுள்ளன. இதன் மூலம் ஆளும் பாஜக அரசு மீண்டும் அசாம் மாநிலத்தைக் கைப்பற்றியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்