Aran Sei

அதானியிடம் கையளிக்க பணியாளர் குடியிருப்பை காலி செய்ய உத்தரவிட்ட ஏர் இந்தியா – காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஊழியர்கள் முடிவு

ர் இந்தியா தனியார்மயமாவதால், பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பை ஆறு மாதத்திற்குள் காலி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து நவம்பர் 2 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

பணி ஓய்வுப் பெறும் வரை குடியிருப்பில் வசிக்க அனுமதிக்குமாறு ஊழியர்களின் 3 சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த  ஆண்டு முதல் சேவை தொடங்க டாடா முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி ஏர் இந்தியா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தனியார்மயப்படுத்தல் தொடங்கியதில் இருந்து ஆறு மாதத்திற்குள் குடியிருப்பைக் காலிச் செய்வது தொடர்பாக அக்போடர் 20 ஆம் தேதிக்குள் கையெழுத்திட்டு தர வேண்டும்” என ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் தொடர்பாக பிராந்திய தொழிலாளர் ஆணையரிடம் ஏர் இந்தியா யூனியன்களின் கூட்டு நடவடிக்கை குழு கடிதம் அளித்துள்ளது.

மும்பை கலினா பகுதியில் 184 ஏக்கரில் அமைந்துள்ள பணியாளர் குடியிருப்பில்  7 ஆயிரம் ஊழியர்கள் வசிக்கின்றனர்.

”பணியாளர்கள் குடியிருப்பு அமைந்திருக்கும் இடம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நிரந்தர குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு விமான நிலையங்கள் ஆணையம் தான் உரிமையாளர், மும்பை சர்வதேச விமானநிலையம் லிமிடெட் (எம்ஐஏஎல்) குத்தகைக்கு தான் எடுத்துள்ளது. எனவே, குடியிருப்புகளை அவசர கதியில் காலி செய்து, மும்பை விமான நிலையத்தைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என கோரியுள்ள ஊழியர்கள் சங்கம், “மும்பையில் சொந்தமாக வீடு இல்லாத, வீட்டு வாடகைப்படி (House Rent Allowance) வழங்கப்படாத ஊழியர்களுக்கு மட்டுமே பெரும்பாலும், குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படுகின்றன. எனவே பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள சேவை நிபந்தனை மற்றும் சட்ட உரிமையின் படி, குடியிருப்புகளில் வசிக்க அவர்களுக்கு உரிமை உண்டு” என ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Source : Times of India 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்