நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும், அதிமுக -பாஜக கூட்டணியைத் தமிழக மக்கள் புறக்கணித்து அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (நவம்பர் 22), அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக -அதிமுக கூட்டணி தொடரும் என்று அரசு விழா என்று கூட பாராமல் துணை முதலமைச்சர் அறிவிப்புச் செய்து இருக்கிறார். அதை முதலமைச்சரும் ஆமோதித்து இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.
‘பாஜகவை எதிர்ப்பதற்கு, பதவியைக் கூட இழக்கத் தயார் ‘ – திருமாவளவன் ஆவேசம்
தமிழ், தமிழர் , தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து எதிராக இருக்கும் ஆட்சி மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
”தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிப்பது; தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளில் எல்லாம் வடமாநிலத்தவருக்கு வழங்குவது; தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியைத் தர மறுப்பது; தமிழ்நாட்டின் அதிகாரங்களில் தலையிடுவது எனத் தமிழ்நாட்டுக்குப் பாஜக அரசு செய்து வரும் துரோகப் பட்டியல் மிகவும் நீளமானது.” என்று கூறியுள்ளார்.
‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்
”அரசு விழா என்று கூட பாராமல், பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்று போட்டிபோட்டுக்கொண்டு ஓபிஎஸ்- இபிஎஸ் அறிவிப்பு செய்திருப்பதிலிருந்து அவர்கள் எந்த அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
”அதிமுகவை பாஜகவுவிடம் சரணடைய வைத்திருக்கும் இந்தத் துரோகச் செயலை அதிமுகவை துவக்கிய திரு.எம்ஜிஆர் ; மற்றும் செல்வி.ஜெயலலிதா ஆகியோர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். அதிமுக தொண்டர்களும் இதை மனமார ஏற்க மாட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.
`நாவை அடக்கிப் பேசுங்கள்’ – பாஜகவிற்கு ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை
தமிழ் நாட்டு நலனை அடகு வைத்தது மட்டுமின்றி, இப்பொழுது தங்களது கட்சியையும் பாஜகவுக்கு அடகு வைத்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார் திருமாவளவன்.
இந்தக் கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் பாராளுமன்றத் தேர்தலில் எப்படி இந்தக் கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டினார்களோ அதைப்போலவே சட்டமன்ற தேர்தலிலும் இக்கூட்டணியை மக்கள் படுதோல்வி அடையச் செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உறுதிப்படக் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.