Aran Sei

திமுக வேட்பாளர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களில் வருமானவரி சோதனை – பாஜகவின் தோல்வி பயம் என ராகுல் காந்தி கண்டனம்

credits : pti

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், கரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அண்ணா நகர் திமுக வேட்பாளரின் மகன் கார்த்திக் மோகன்  உள்ளிட்ட திமுக கட்சியினரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையின் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், வருமான வரித்துறை அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “தோல்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் பாஜக கடைபிடிக்கும் வழிமுறை தான் வருமான வரி சோதனை ”என பதிவிட்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய,மாநில அரசுகள் இணைந்து வருமானவரித்துறையை தவறான முறையில் பயன்படுத்தி, திமுகவின் முன்னணித் தலைவர்கள் மீது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மகள் வீட்டில் வருமான வரி சோதனை: ‘நாங்கள் பனங்காட்டு நரிகள்; சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம் – ஸ்டாலின்

மேலும், “திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டிருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது. இதுவரை வந்த கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் திமுக கூட்டணி தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு  வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என தெரிவித்துள்ளது. இத்தகைய சோதனைகள் மூலம் எங்கள் வெற்றியை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்தார்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்