கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதமாற்ற தடுப்பு சட்டத்தை வெளிப்படையாக எதிர்த்துள்ள பாஜக மூத்த தலைவரும் கர்நாடக சட்டமேலவை உறுப்பினருமான ஏ.எச்.விஸ்வநாத், 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்திருத்தவாதி பசவேஸ்வரரால் போதிக்கப்படும் சமத்துவத்திற்கு எதிராக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மக்களைப் பிரிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள ஏ.எச்.விஸ்வநாத், “அம்மசோதாவை சட்டப்பேரவையின் கூட்டுத் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். இச்சர்ச்சைக்குரிய பிரச்சினையில் மத சாமியார்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரை அழைக்க வேண்டும். சாதிகளற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக பசவேஸ்வரரைப் பின்பற்றுபவர்கள் பலர் ஒன்றிணைந்ததன் காரணமாகவே, வீரசைவ-லிங்காயத் நம்பிக்கை உருவானது” என்று கூறியுள்ளார்.
கர்நாடகா மதமாற்ற தடை மசோதா – எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்டப்பேரவையில் நிறைவேறியது
“லிங்காயத் மடங்கள், அஹிண்டா மடங்களின் உள்ள சாமியார்கள் இந்த விவகாரத்தில் வாய்மூடி மௌனமாக இருப்பது கவலையளிப்பது. அரசாங்கத்தின் மானியங்கள் அவர்கள் வெளிப்படையாக பேசவிடாமல் செய்கின்றன. எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் கூட தங்கள் கருத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் ராஜ்யோத்சவா விருதுகளில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவசர அவசரமாக இம்மசோதாவைத் திணிப்பதற்குப் பதிலாக, இதன் அவசியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்து கூறி, சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, இதில் எவ்வித மறைமுக திட்டமும் இல்லை என்பதை மாநில அரசு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இம்மசோதாவின் வரைவை இரவோடு இரவாக தயாரித்து சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நம் சமூகத்தை பிளவுபடுத்தும் வேலையைக் கைவிட்டுவிட்டு, பொதுமக்களின் கருத்தை கேட்கும் ஜனநாயக வழிமுறையை பின்பற்ற வேண்டும்” என்றும் ஏ.எச்.விஸ்வநாதா தெரிவித்துள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.