பாஜக சட்டபேரவை உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆளும் பஞ்சாபைத் தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கம், சட்டபேரவையில் அத்தகைய தீர்மானம் தாக்கல் செய்து நேற்று(நவம்பர் 16) நிறைவேற்றியுள்ளது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, சபையின் அலுவல் நடத்தை விதி 169ன் கீழ் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். இதற்கு ஆதரவாக 112 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 63 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
“சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநில அதிகாரம் என்பதால், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை அதிகரிப்பது நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று இச்சபை நம்புகிறது. ஒன்றிய அரசின் இம்முடிவு எல்லை பாதுகாப்பு படை சட்டத்தின் விதியை மீறுகிறது. மாநில காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை இடையே ஒருங்கிணைப்பு சிக்கல்கள் உருவாக வழிவகுக்கும்” என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள்து.
இத்தீர்மானம் குறித்து பேசியுள்ள பார்த்தா சாட்டர்ஜி, “எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை அதிகரிப்பது நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்பதால் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அப்படைக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய நினைக்கவில்லை. அதில் பல நல்ல அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில், எல்லைக்கு அருகில் வசிக்கும் மக்களை சித்திரவதை செய்யும் அதிகாரிகளும் உள்ளனர். இது மாநிலத்தின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்பாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் சர்வதேச எல்லைகளில் இருந்து 15 கிலோமீட்டர் வரை எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு என்று இருந்ததை 50 கிலோமீட்டர் தூரம் வரை நீட்டித்து அண்மையில் ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.
சர்வதேச எல்லைகள் கொண்ட மாநிலங்களில் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்காக, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு குறித்து ஒன்றிய அரசின் 2014 ஆண்டு அறிக்கையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, மேகலாயா ஆகிய மாநிலங்கள் மற்றும் ஜம்மு – காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மொத்த பகுதியிலும் மற்றும் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் 50 கிலோமீட்டர் வரையிலும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரத்தைப் பயன்படுத்த இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது.
முன்னதாக, 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், குஜராத்தில் 80 கிலோமீட்டரும், ராஜஸ்தானில் 50 கிலோமீட்டரும் மற்றும் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் 15 கிலோமீட்டர் வரையிலும் அதிகாரத்தைப் பயன்படுத்த எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.